துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையினை மீண்டும் பொருத்தி கோவை அரசு மருத்துவர்கள் அசத்தல்..!
அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு துண்டான கையை உடலுடன் இணைத்தனர். எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களும் இணைக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட கைக்கு மீண்டும் உயிர் ஊட்டினர்.
குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட இளைஞனுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக இணைத்தனர்.
ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் கணேஷ். இவர் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் அரிவாளால் கணேஷை வெட்டியுள்ளார். இதில் அவருக்கு முதுகு, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டு விழுந்து காயம் ஏற்பட்டது. அரிவாளால் தாக்கியதில் வலது கை துண்டாகி விழுந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து கணேஷை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன் பேரில் கணேஷ் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிக காயங்களால் இரத்த இழப்பு கணேஷ்க்கு ஏற்பட்டு இருந்தது. துண்டான அவரது கை பாகத்தை ஈரத் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி, அதனை ஐஸ் கட்டிகள் நிறைந்த பெட்டியில் வைத்து பத்திரமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. கணேஷை பரிசோதித்த மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட கையினை மீண்டும் இணைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு துண்டான கையை உடலுடன் இணைத்தனர். அப்போது எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களும் இணைக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட கைக்கு மீண்டும் உயிர் ஊட்டினர். இதை அடுத்து கடந்த 20 நாட்களாக மருத்துவர்களின் மேற்பார்வையில் இருந்த கணேஷுக்கு கை இணைந்ததோடு குணமாகி வருகிறார். கணேஷ் தற்போது ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருந்து வருவதாகவும், இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் அது பல லட்சம் ரூபாய் அளவிற்கு செலவாகி இருக்கலாம் எனவும், இதனை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்