கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி தகுதி இழப்பு ; மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் என்ன?
தொடர்ந்து 3 முறை மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காததால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் இன்று முதல் நிவேதா தனது கவுன்சிலர் தகுதியை இழக்கிறார்.
கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தனது கவுன்சிலர் தகுதி இழக்கிறார்.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 97 வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த நிவேதா சேனாதிபதி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து 3 முறை மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காததால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் இன்று முதல் நிவேதா தனது கவுன்சிலர் தகுதியை இழக்கிறார்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும். பிறகு அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து காரணம் ஏதாவது தெரிவித்து, இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.
இது குறித்து மாநகாட்சி அதிகாரிகள் கூறும் போது, “நிவேதா மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று முறை மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில், சட்டப்படி தானகவே தகுதி இழந்து விடுவார். இது குறித்து மாநகராட்சி தரப்பில் உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். அவர் தரும் விளக்கத்தினை பொருத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். நிவேதா உரிய காரணம் ஏதாவது தெரிவித்தால், அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த மாமன்ற கூட்டத்தின்போது வெளியிடுவார். அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும், முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாநகராட்சி தேர்தலின் போது மேயர் வேட்பாளர் போட்டியில் நிவேதாவும் இருந்தார். மேயர் பதவி கிடைக்காத அதிருப்தியில் அவர் இருந்த நிலையில், அவரது தந்தையின் பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்