பழங்குடியின மாணவனின் கல்விக் கனவை நனவாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ; எதிர்கட்சி தலைவராக பெற்ற மனுவிற்கு முதலமைச்சராகி தீர்வு
வேளாண்மை பல்கலை மற்றும் கால்நடை மருத்துவ பட்ட படிப்பிற்கு பழங்குடியினர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இட ஒதுக்கீட்டு கணக்குகள் குளறுபடி காரணமாக சந்திரனுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை
ஈரோட்டிலிருந்து 100 கி.மீ தொலைவில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது, சுண்டப்போடு என்ற ஊராளி பழங்குடியின கிராமம். பேருந்து வசதிகள் இல்லாத இந்த கிராமத்திற்கு கொங்காடை என்ற கிராமத்திலிருந்து 5 கிமீ ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். சுண்டபோடு கிராமத்திலிருந்து இதுவரை ஒருவர் கூட கல்லூரிப் படிப்பில் சேரவில்லை. முதலாவது நபராக, கடந்த 2019 ம் ஆண்டு இரண்டு கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பித்து கவனம் பெற்றார் சந்திரன் என்ற மாணவர்.
ஊராளியின பழங்குடியான உடுமுட்டி என்பவரின் 11 குழந்தைகளில் சந்திரனும் ஒருவர். உடுமுட்டி விவசாயம் செய்து வருவதோடு, மாடு மேய்த்தும் வருகிறார். குழந்தைத் தொழிலாளியாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த நிலையில் இருந்து மீட்கப்பட்ட சந்திரன் தான், இக்கிராமத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்த முதல் நபர். கோபி வைரவிழா மே நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தொழிற்பாட பிரிவில் வேளாண்மை பயின்ற சந்திரன், 2019 ல் கோவை வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் சென்னை கால்நடை மருத்துவ பட்ட படிப்பிற்கு விண்ணப்பித்ததில் பழங்குடியினருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இருப்பினும் இட ஒதுக்கீட்டு கணக்குகள் குளறுபடி காரணமாக சந்திரனுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
கல்லூரி பதிவாளர் முதல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரை முறையிடுகிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்ட உதவி செய்வதாக சந்திரனுக்கு உறுதி கூறினார். சென்னை உயர் நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றையும் நாடினார். சுடர் அமைப்பின் துணையோடு பல கட்ட முயற்சிகள் நடந்த போதும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சந்திரன் மாடு மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் 3 ஆண்டு சந்திரனின் போராட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் முடிவுக்கு வந்திருக்கிறது. எதிர்கட்சித் தலைவராக இருந்த போது கொடுக்கப்பட்ட மனுவிற்கு, முதலமைச்சரான பின்னர் தீர்வை கொடுத்துள்ளார். சந்திரனுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் (சுயநிதி) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு போராட்டம் முடிவடைந்து கல்விக் கனவு நனவாகி இருப்பதால் சந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜ் கூறுகையில், “இட ஒதுக்கீடு குளறுபடியால் 3 ஆண்டுகளாக கல்லூரியில் சேர முடியாமல் சந்திரன் தவித்து வந்தார். முதலமைச்சரின் நடவடிக்கையால் தற்போது சந்திரனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பில் தொழிற்பாட பிரிவு பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 5% இடஒதுக்கீடு உண்டு. ஆனால் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 28 சுயநிதிக் கல்லூரிகளில் 5% இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை. இந்த நிலையில் சந்திரனைப் போன்ற பல மாணவர்கள் பயன் பெறும் வகையில் தனியார் கல்லூரிகளிலும் 5% இடங்களை ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் அரசாணையை வெளியிட்டுள்ளார். இதனால் தொழிற்பாட பிரிவில் பயின்றோருக்கு கூடுதலாக 140 இடங்கள் கிடைத்துள்ளன. இவ்வாண்டு முதல் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றிகள் கோடி” என அவர் தெரிவித்தார்.