கோவை : லஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..!
இலஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின
![கோவை : லஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..! Bribery Corruption woman police transferred to Armed Forces in Coimbatore கோவை : லஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/e9359c862e4229f136039ad24e45f826_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் பெண் காவலர் இலஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், அக்காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராக பாப்பாத்தி என்பவர் பணியாற்றி வந்தார். 40 வயதான இவர், போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி.கே. மார்கெட் பகுதியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பாப்பாத்தி ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி, ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடம் பாப்பாத்தி லஞ்சம் வாங்கி உள்ளார். பெண் தலைமைக் காவலர் பாப்பாத்தி தொடர்ச்சியாக வாகன ஓட்டிகளிடம் இலஞ்சம் வாங்கி வந்ததாக ஊறப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டி ஒருவரிடம் பெண் தலைமை காவலர் பாப்பாத்தி இலஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அக்காட்சிகளில் சாலையோரமாக நிற்கும் பெண் காவலரிடம் வரும் வாகன ஓட்டி ஒருவர் பேசிக் கொண்டுள்ளார். அப்போது பேச்சு கொடுத்தபடியே, வாகன ஓட்டி கொடுக்கும் இலஞ்ச பணத்தை வாங்கியுள்ளார். இக்காட்சிகளை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் லஞ்சம் வாங்கிய பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
லஞ்சம் வாங்கும் இந்த காட்சிகள் காவல் துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, பாப்பாத்தி லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து லஞ்சம் வாங்கிய பெண் காவலர் பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தாமோதர் உத்தரவிட்டார். இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “பெண் தலைமைக் காவலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போது லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் வாங்கிய பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாப்பாத்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ காட்சியில் லஞ்சம் கொடுத்த நபர் யார், எதற்காக லஞ்சம் கொடுத்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண் தலைமைக் காவலர் பாப்பாத்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)