Crime : கோவையில் லாட்டரி விற்றவர் கைது..! 2140 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..!
விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வினோத்குமார் (40) என்பவரை கையும் களவுமாக பிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 2140 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதும், அதனைத் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கேரள லாட்டரி சீட்டுகள்:
இதன் அடிப்படையில் காவல் துறையினர் தண்டு மாரியம்மன் கோவில் கோட்டம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது லாட்டரி சீட்டுகளை வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வினோத்குமார் (40) என்பவரை கையும் களவுமாக பிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 2140 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வினோத்குமார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது போன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு 94981-81212, 94981-01165 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடு புகுந்து கொள்ளை:
இதேபோல வடவள்ளி பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடித்தவர்களை 48 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பெரியசாமி(49) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பெரியசாமி வழக்கம்போல் வெளியில் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முன்பக்க கதவை அடைத்து விட்டு குளிப்பதற்காக பாத்ரூமிற்க்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது, தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணமும் திருடு போனதை அறிந்த அவர், உடனடியாக அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(23) மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசுருளி(35) ஆகியோர் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் 17 1/4 சவரன் தங்க நகைகள், ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்