மின்மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி - கோவையில் நடுநடுங்க வைத்த சம்பவம்..!
காசியில் அகோரிகள் பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல போல, மணிகண்டனின் உடல் மீது அமர்ந்து அகோரி மணிகண்டன் அகோரிகள் புடை சூழ சிவ வாத்தியங்களுடன் காலபைரவர் பூஜை நடத்தினார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணமான நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 மாதங்களாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இறுதிச்சடங்கிற்கு வந்த அகோரிகள்:
இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் இருந்த மணிகண்டன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மணிகண்டன் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மணிகண்டனின் உடல் உடற்கூராய்விற்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்த உறவினர்கள், சூலூர் மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு உறவினர்களுடன் வந்த 8 அகோரிகள் வந்தனர். அவருடன் சிறுவயது முதலே நண்பராக பழகி வந்த திருச்சியை சேர்ந்த அகோரி சாமியார் மணிகண்டனும் வந்து இறுதி சடங்கில் பங்கேற்றார். அவர்கள் சடலத்தை வேனில் இருந்து இறக்கி எடுத்துச் சென்ற போது, உடுக்கை வாத்தியங்களுடன் மந்திரங்களை ஓதியபடி எடுத்துச் சென்றனர்.
உடல் மீது அமர்ந்து பூஜை:
மணிகண்டன் உடலை எரியூட்டும் முன்பு காசியில் அகோரிகள் பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல போல, மணிகண்டனின் உடல் மீது அமர்ந்து அகோரி மணிகண்டன் அகோரிகள் புடை சூழ சிவ வாத்தியங்களுடன் காலபைரவர் பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தார். அதன்பின் மணிகண்டன் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறந்தவர் சடலம் மீது அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இறந்தவரின் உறவினர்கள் சம்மத்துடனே இந்த சடங்குகள் மின் மயானத்தில் நடந்ததாக மின்மயான பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்