ABP NADU செய்தி எதிரொலி: காடர் பழங்குடிகளுக்கு புதிய இடம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி
தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கும் பணியில் காடர் பழங்குடிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மானாம்பள்ளி வனத்துறையினர் பழங்குடிகள் அமைத்திருந்த குடிசைகளை அகற்றினர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதக்குள் உள்ள கல்லார்குடி பகுதியில் 23 காடர் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனர். கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் மண் சரிவினால் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. இதையடுத்து காடர் பழங்குடிகள் மண் சரிவு ஏற்படாத இடமாக கருதிய தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்தனர். புலிகள் காப்பக உள் வட்ட பகுதி என்பதை காரணம் காட்டி, அப்பகுதியில் குடியிருக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பழங்குடிகளை அப்புறப்படுத்திய வனத்துறையினர், அருகேயுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்க வைத்தனர்.
இதனிடையே தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த கோரி, பழங்குடிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பழங்குடிகளின் கோரிக்கையை ஏற்று, தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. வருவாய் துறை, வனத்துறை, நில அளவைத் துறை இணைந்து தெப்பக்குளமேடு பகுதியில் புதிய கிராமத்திற்கான நில அளவீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தெப்பக்குள மேட்டில் 21 குடும்பங்களுக்கு ஒன்றரை செண்ட் வீதம் நிலத்திற்கான பட்டாக்களை வழங்கினார்.
இதனிடையே தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கும் பணியில் காடர் பழங்குடிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மானாம்பள்ளி வனத்துறையினர் பழங்குடிகள் அமைத்திருந்த குடிசைகளை அகற்றினர். முன்னறிவிப்பு இன்றி கால அவகாசம் வழங்காமல் அத்துமீறி குடிசைகளை வனத்துறையினர் அகற்றியதாக பழங்குடிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான செய்தி ஏபிபிநாடுவில் வெளியானது. இதனைத் தொடர்ந்து குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் பழங்குடிகள், வனத்துறையினர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கல்லாறுகுடி காடர் பழங்குடி மக்களுக்கு பழைய கல்லார்குடியில் உள்ள 12 ஏக்கர் குடியிருப்பு நிலத்தில் நிகரான அளவு தெப்பக்குளமேட்டில் இடம் ஒதுக்கப்படும். அதில் பாதுகாப்பான பகுதியில் தனித்தனியாக வீடு கட்டி கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஓரிரு வாரத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் புதிதாக நில அளவை செய்யப்பட்டு போதுமான இடம் ஒதுக்கி தரப்படும் எனவும், அதன்பின் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக வீடுகள் அமைத்து கொள்ளலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பட்டா வழங்கிய நிலங்களில் பாதுகாப்பான தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், அழிவு நிலையில் உள்ள பழங்குடிகளை பாதுகாக்க முழுமையாக ஆய்வுகளும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்களுக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் மாதம் தோறும் குறிப்பிட்ட நாளில் பழங்குடிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.