செல்போனுக்கு சேமித்த பணத்தில் உணவுப்பொருள் வழங்கி உதவிய மாணவர்
ஊரடங்கினால் உணவின்றி சிரமப்படுவோரை பார்த்து எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைப் பார்த்தது முதல் மனம் ஒரு மாதிரி இருந்து வந்தது. அதனால் வயதானவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவலாம் என முடிவெடுத்தேன் என்கிறார் அந்த மாணவர்!
கோவை அருகே சஞ்சீவ் என்ற பள்ளி மாணவர் செல்போன் வாங்க சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் 50 பேருக்கு உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையை விட கோவையில் அதிக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அதேபோல நகரப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தொற்று பரவல் தீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நடமாடும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதேசமயம் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும், தன்னார்வலர்களும் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில் செல்போன் வாங்க சேமித்த பணத்தை ஊரடங்கினால் பரிதவிக்கும் 50 பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கி பள்ளி மாணவர் ஒருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் சக்தி சாலை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது 16 வயது மகன் சஞ்சீவ். சஞ்சீவ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏழைகள் 50 பேருக்கு செல்போன் வாங்குவதற்காக சேமித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தில் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பள்ளி மாணவர் சஞ்சீவ் கூறுகையில், "நான் 10 ம் வகுப்பு முடித்து 11 ம் வகுப்பில் தற்போது சேர்ந்துள்ளேன். செல்போன் வாங்குவதற்காக 6 மாதங்களாக பணம் சேமித்து வைத்துக் கொண்டிருந்தேன். ஊரடங்கினால் வயதான முதியவர்கள், இல்லாதவர்கள் கஷ்டப்படுவதை பார்த்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைப் பார்த்தது முதல் மனம் ஒரு மாதிரி இருந்து வந்தது. அதனால் வயதானவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவலாம் என முடிவெடுத்தேன்.
6 மாதமாக செல்போன் வாங்க சேமித்த பணம் 7 ஆயிரம் ரூபாய் இருந்தது. எனவே பெற்றோரின் அனுமதி உடன் உணவுப் பொருட்களை வழங்கினேன். வயதான முதியவர்கள், இல்லாதவர்களாக பார்த்து 50 பேருக்கு உணவுப் பொருட்களை வழங்கினேன். அரிசி, கீரை, தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், பால், தயிர் உள்ளிட்ட காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினேன். அவர்களுக்கு உதவி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. செல்போன் வாங்கவில்லை என்ற வருத்தம் துளியும் இல்லை. இப்போது தான் மனதிருப்தியாக உள்ளது" என அவர் தெரிவித்தார். பள்ளி மாணவர் சஞ்சீவ்வின் இந்த மனிதநேய சேவைக்கு, பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்