கோவை வெள்ளலூரில் மோதலில் ஈடுபட்ட திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு
திமுக, அதிமுக, சுயேச்சை என 15 கவுன்சிலர்கள் மீதும் போத்தனூர் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![கோவை வெள்ளலூரில் மோதலில் ஈடுபட்ட திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு A case has been registered against 15 dmk and admk councilors in connection with the dmk admk clash in Coimbatore கோவை வெள்ளலூரில் மோதலில் ஈடுபட்ட திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/07/2858a5f181146975d7dcb5856c2578fc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றது. வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இதனால் இரண்டாவது முறையாக வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக தக்கவைத்தது. அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மருதாசலம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார்.
மாவட்டம் முழுவதும் திமுக அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இப்பேரூராட்சியையும் கைப்பற்ற திமுக முடிவு செய்தது. கடந்த 4 ம் தேதி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் கார்களில் வந்து கொண்டிருந்த போது, வெள்ளலூர் அருகே 3 கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பதட்டமான சூழல் காரணமாக ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர், உறுப்பினர்களை மட்டும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். இதனிடையே பேரூராட்சி அலுவலகத்திற்குள் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரான பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மற்றொரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். பிற்பகலில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்ற போதும் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வாக்கு பெட்டி, வாக்குச்சீட்டுகள் அலுவலகத்திற்கு வெளியே சாலையில் தூக்கி வீசப்பட்டது. இதனால் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது..
இந்நிலையில் திமுக, அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக வெள்ளலூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான பாலசுப்பிரமணி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திமுக, அதிமுக, சுயேச்சை என 15 கவுன்சிலர்கள் மீதும் போத்தனூர் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)