பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை! போலீஸுக்கு கிடைத்த துப்பு! நள்ளிரவில் நடந்தது என்ன?
100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இரவு 12.30 முதல் 1 மணிக்குள் ஒரு நபர் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து, வந்த வழியாக சென்றுள்ளார்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் நகைக்கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிக்க வணிக பகுதியான இப்பகுதியில் பல்வேறு நிறுவனங்களின் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த நூறடி சாலையில் கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்றிரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் இன்று காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஊழியர்கள் கடையினுள் சென்று பார்த்த போது, நேற்றிரவு கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது குறித்து கடையின் உரிமையாளருக்கும், காவல் துறையினருக்கும் கடை ஊழியர்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காட்டூர் காவல் துறையினர் நகைக்கடையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சண்முகம் நகைக்கடையில் நேரில் ஆய்வு செய்தார்.
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரின் முக்கிய பகுதியில் பாதுகாப்பை மீறி நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இரவு 12.30 முதல் 1 மணிக்குள் ஒரு நபர் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து, வந்த வழியாக சென்றுள்ளார். காலையில் கடையை திறந்த பின்னர், திருட்டு நடந்திருப்பது தெரிந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். கடையின் மாடியில் கடை ஊழியர்கள் 12 பேர் தங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது, கொள்ளை நடந்ததை பார்க்கவில்லை என்றனர்.
திருட்டு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளது. குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள். கடைக்குள் ஒரு நபர் மட்டுமே வந்துள்ளார். இதில் வேறு யாராவது சம்மந்தப்பட்டுள்ளார்களா என விசாரணை நடந்து வருகிறது. 150 முதல் 200 சவரண் வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அலாரம் இல்லை. கடைக்குள் உள்ளே நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு சட்டையில் முகத்தை மறைத்த மாதிரி சென்றுள்ளார். முகமூடி போடவில்லை. கடையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வழியாக உள்ளே நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அக்கடையில் அண்மையில் புனரமைப்பு பணிகள் நடந்துள்ளன. அப்பணிகளில் ஈடுபட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்” எனத் தெரிவித்தார்.