கோவை : பாலியல் தொல்லை காரணமாக 2 பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி.. அடுத்தடுத்து தொடரும் பகீர்
கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு முடிவதற்குள், மீண்டும் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே அந்த மாணவிக்கும், அன்னூர் பகுதியை சேர்ந்த விமான நிலையத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணக்குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை மிரட்டி சரவணக்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சரவணக்குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், இது குறித்து வெளியே சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி மன உளைச்சல் தங்க முடியாமல் விரக்தியில் பள்ளி கழிப்பறையில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சரவணக்குமாரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதேபோல கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதான 9 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சங்கோதிபாளையத்தை சேர்ந்த ராமர் (39) என்ற கூலி தொழிலாளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததும், இதனால் மன உளைச்சல் அடைந்து மாணவி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராமர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு முடிவதற்குள், மீண்டும் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்