இந்தாண்டு ரூ.11500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!
விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு 9500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில், இந்த ஆண்டு 11500 கோடி பயிர் கடனை வழங்கப்படும்
கோவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிந்தாமணி என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனம் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கொரொனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அதனை இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு 9500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில், இந்த ஆண்டு 11500 கோடி பயிர் கடனை வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.
நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நியாய விலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும். இந்த துறை முதலமைச்சர் இடும் ஆணையை மக்களிடம் கொண்டு செல்லும். கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படும் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையினை 55 ஆயிரத்தில் இருத்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படும். படித்த இளைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் எந்த தவறுக்கும் இடமளிக்காமல் வேலை வாய்ப்பு வழங்கப்படும். குடும்ப அட்டை இல்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைக்க உணவுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 4451 விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. வரும் 31 ம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர், அதில் உள்ளவை குறித்து தெரிவிக்கப்படும். வேப்பபுண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. தரமான விதைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் முறைப்படி நடக்கும்” என அவர் தெரிவித்தார்.
வேளாண் தனி நிதிநிலை கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக அரங்கில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் என பலர் பங்கேற்றனர். அப்போது 2021-2022ம் ஆண்டு வேளாண் தனி நிதி நிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்துகளை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பல்கலையில் உள்ள நூற்றாண்டு கட்டிடத்தை பார்வையிட்டு மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண்மைத் தொழில்நுட்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, பல்கலைக்கழக பழத் தோட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் பயிர் வளர்ச்சியூக்கிகள் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் பற்றிய செயல் விளக்கத்தினை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.