Vandalur zoo | வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு : கொரோனா தொற்று காரணமா?
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. இந்நிலையில் நிலா என்ற சிங்கத்திற்கு திடீர் உடல்நிலை குறைவால், சிகிச்சை அளித்தும் பலன் இல்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கமும் 12 வயதுடைய பத்மநாபன் என்ற ஆண் சிங்கமும் உயிரிழந்தன.
இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக வயது மூப்பு மற்றும் கல்லீரல் கோளாறு காரணமாக பீஷ்மர் என்ற 16 வயது உடைய வெள்ளைப்புலி அவதிப்பட்டு வந்தது . கடந்த 3 மாதகாலமாக சிறப்பு கால்நடைத்துறை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் நேற்று சிகிச்சை பலனின்றி பீஷ்மர் என்ற வெள்ளைப் புலி உயிரிழந்தது.
வண்டலூர் பூங்காவிற்கு வெள்ளைப் புலிகளை விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த 2006 -ம் ஆண்டு டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூருக்கு பீஷ்மர், அனு என்ற வெள்ளைப் புலிகள் கொண்டுவரப்பட்டன. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த இந்த வெள்ளைப் புலி ஜோடிகள் 7 குட்டிகள் இதுவரை ஈன்று உள்ளன . இரண்டு வெள்ளை புலிகளும் ஈன்ற கூட்டின் காரணமாக தற்போது வண்டலூர் பூங்காவில் பத்திற்கும் மேற்பட்ட வெள்ளைப் புலிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வண்டலூர் பூங்காவில் இணை இயக்குனர் சதீஷிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த சில மாதங்களாகவே பீஷ்மர் என்ற வெள்ளை புலி அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று உயிரிழந்ததாக தெரிவித்தார்.
வெள்ளைப் புலி பீஷ்மர் உடலை கூறு ஆய்வு செய்த பிறகு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . சில வாரங்களுக்கு முன் கொரோனோவால் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்த நிலையில், வயது முதிர்வின் காரணமாக வெள்ளைப் புள்ளி பீஷ்மர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.