Chennai: திடீர் உடல்நலக்குறைவால் தந்தை மரணம் .. சோகத்திலும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
சென்னையில் தந்தை இறந்த சோகத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தந்தை இறந்த சோகத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிவுக்கு வந்த பொதுத்தேர்வுகள்
தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும், மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய 11 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதியும் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (ஏப்ரல் 20) ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்தப் பணி மே 3 ஆம் தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 17ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இப்படியான நிலையில் தந்தை இறந்த சோகத்தில் சென்னை திருவொற்றியூரில் மாணவி ஒருவர் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மாணவி
சென்னை திருவொற்றியூர் பெரியமேட்டுப்பாளையத்தில் உள்ள 1வது தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கட்டிடத்தொழிலாளி. இவர் மனைவி பவானி. மகள்கள் பொற்செல்வி , ஜெயலட்சுமி ஆகியோரோடு வசித்து வந்தார். இதில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஜெயலட்சுமி காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். மூர்த்தி எப்போதுமே ஜெயலட்சுமியிடம் படிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தந்தை மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் நிலைகுலைந்துப் போன ஜெயலட்சுமி , எப்படி தேர்வு எழுத செல்வது என கலங்கினார்.
ஆனால் அவரை தந்தை மூர்த்தியின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் குடும்பத்தினர் சக மாணவிகள் துணையுடன் தேர்வு எழுத அனுப்பினர். தேர்வுக்கு செல்வதற்கு முன் தந்தையின் உடலைப் பார்த்து ஜெயலட்சுமி கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
மேலும் தேர்வு எழுதி முடித்த மாணவிக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய ஜெயலட்சுமி, எனது தந்தை ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதியதாக கூறினார். இதனைத் தொடர்ந்து மாலையில் மூர்த்தியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத சென்ற மாணவியின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.