Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ?
"அமைச்சர்கள் ஏ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோருடன் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. "
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சாம்சங் தொழிற்சாலை சேர்ந்த ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரிப்பது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900-திற்கும் மேற்பட்ட சிஐடிய தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழு அமைத்து பேச்சு வார்த்தை
போராட்டத்தை கைவிட வேண்டும் என 5க்கும் மேற்பட்ட முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தோல்வியில் முடிந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு குறு தொழில்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமை குழு அமைத்தது.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
தொழிலாளர்களின் முக்கிய 14 கோரிக்கைகள் நிறைவேற்ற சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என கூறி தொடர்ந்து சி.ஐ.டி. யு தொழிற்சங்க ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தொழிலாளர்கள் கைது
இந்தநிலையில் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என தொழிலாளர்களை கைது செய்த போலீசார் மண்டபங்களில் அடைத்தனர். மேலும் போராட்டத்தை முன் நின்று நடத்தி வந்த சிஐடியு முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், முத்தரசன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் சம்பவம் நடந்த அன்று ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சீமான் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை
இந்தநிலையில் நேற்று மீண்டும் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் ஏ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோருடன் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. சிஐடியு சார்பில் பங்கேற்ற தலைவர்கள் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என ஒற்றைப் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் தோல்வியில் முடிந்துள்ளது.
நம்பிக்கை அதானே எல்லாம்
தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் என்ன நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் இப்போது கூற முடியாது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.