சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் பரந்தூரில் 132 வது நாளாக தொடரும் போராட்டம்..!
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 132 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஒப்பந்தப்புள்ளி:
இந்த அறிக்கையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது, விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையும் தயாரிக்கும் பணி பற்றியும் விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனையும் இடம் பெற்றுள்ளது. 2069- 70 ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும். பசுமை விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
132- வது நாளாக நடைபெறும் போராட்டம்
குறிப்பாக தங்களது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள், விவசாயத்தை அழித்து கொண்டு வரப்படும் இந்த புதிய விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாங்கள் வாழும் இக்கிராமத்தை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என கூறியும், தங்கள் பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து, 100 நாட்களைக் கடந்து, இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரத்தில் 132வது நாளாக இரவு நேர அடையாள போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து வயதுடைய தரப்பினரும் ஒன்று கூட தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில், "எங்கள் பகுதிக்கு கள ஆய்வு மேற்கொள்ள விடமாட்டோம்" எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பசுமை விமான நிலையம்
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.