கூடுதல் கட்டணம் வசூல் புகார் : கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நடத்துநரிடம் பெற்று பயணிடம் ஒப்படைத்தனர்
கூடுதல் கட்டணம் வசூல் புகார் தொடர்பாக, சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்த மூன்று வட்டார போக்குவரத்து அலுவலர்களை கொண்ட 15 அதிகாரிகள் பயணக் கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் போக்குவரத்துத்துறை அதிகாரிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பர் என துறையின் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்த நிலையில், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் பயணியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை நடத்துநரிடம் பெற்று பயணியரிடம் ஒப்படைத்தனர்.
இணைய வழியில் 2100 ரூபாய்க்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து கோயம்பேட்டிலிருந்து சாத்தான்குளம் பயணித்த பயணியிடம் கூடுதல் தொகையான 700 ரூபாயை நடத்துநரிடம் பெற்று பயணியிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீவைகுண்டம் பயணித்த பயணி ஒருவர் இணையவழியில் ரூ.1750க்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் கூடுதல் தொகையான 500 ரூபாய் பேருந்து நடத்துநரிடம் வசூலிக்கப்பட்டு பயணியிடமே வழங்கப்பட்டது.
கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில், ஒரு வட்டார போக்குவரத்து ஆய்வாளருடன் சேர்த்து தலா மூன்று அதிகாரிகளைக் கொண்ட 5 குழுவினர் பயணச் சீட்டுக் கட்டணம் தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து இணை ஆணையர் ரவிச்சந்திரன், பயணியரிடம் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை நடத்துநரிடம் பெற்று பயணியரிடம் ஒப்படைக்கப்படும். பண்டிகை , விடுமுறை போன்ற பயணியர் கூட்டம் இல்லாத வழக்கமான நாட்களில் வசூலிக்கப்படும் தொகையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தீர்மானிப்போம். உதாரணத்திற்கு திருநெல்வேலிக்கு 1300 ரூபாய் வரை வசூலிக்க அனுமதி உண்டு. கூடுதல் தொகை வசூலிக்கும் பேருந்துகளுக்கு 2000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்