Chennai High court: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த ஓ.பன்னீர் செல்வம் வழக்கு நாளை விசாரணை
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்க உள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்க உள்ளார்.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து, பிரதான வழக்குகளை தள்ளிவைத்திருந்தார்
இதையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவற்றை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வழக்குகளை நாளை விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் ஜூன் 23 பொது குழுவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் என்ற இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மற்றொரு வழக்கு
தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழகம் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது சாஸ்தா பல்கலைக்கழகம் சார்பில், அரசு நிலத்துக்கு பதிலாக நிலத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்க அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், அது பொதுவான அரசு உத்தரவு என்றும், இவர்களுக்கு பொருந்தாது என்றும் சாஸ்தா பல்கலைக்கழகம் நீர்நிலைகள் ஆக்கிரமித்து உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் புது அரசாணையின் கீழ் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளித்த விண்ணப்பத்துக்கு மூன்று நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமை தள்ளிவைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்