Michaung cyclone: புயலை எதிர்கொள்ள தயாரான காஞ்சி மாவட்ட நிர்வாகம் - ஏற்பாடுகள் என்னென்ன..?
Michaung cyclone: 3100 கம்பங்களும், 1306 மின்மாற்றி (Transformer) இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மணல் மூட்டைகள் மற்றும் வெள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு Geo tagging செய்யப்பட்டுள்ளது
Cyclone Michaung (மிக்ஜாம் புயல்)
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் என 72 இடங்கள் கண்டறியப்பட்டது. இதில் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக 3, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 21, ஓரளவுக்கு பாதிக்க கூடிய பகுதிகளாக 26 மற்றும் குறைந்த அளவில் பாதிக்க கூடிய இடங்களாக 22 என 72 கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு 21 குழுக்கள் அமைத்து 21 மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 331 ஏரிகள் உள்ளன. இதில் 80 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 58 ஏரிகள் 76% – 99% நிரம்பியுள்ளன, 94 ஏரிகள் 51% - 75% நிரம்பியுள்ளன, 133 ஏரிகள் 26% -50% நிரம்பியுள்ளன, 16 ஏரிகள் 25% மட்டுமே நிரம்பியுள்ளன. மாவட்டம் முழுவதும் 62 வெள்ள பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
தேசிய பேரிடர் மீட்பு படை
தேசிய பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் கொண்ட குழு இரண்டு அணிகளாக 25 பேர் வீதம் காஞ்சிபுரம் வட்டம் மற்றும் குன்றத்துார் வட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் 25 நபர்கள் காஞ்சிபுரம் வட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். 1300 மணல் மூட்டைகள், 108 ஜேசிபி இயந்திரங்கள், 15 பொக்லைன்கள், 134 மோட்டார் தண்ணீர் இறைச்சும் இயந்திரங்கள், 69 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 41 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மின்சாரத்துறை
மேலும் மின்சாரத்துறை சார்பில் 3100 கம்பங்களும், 1306 மின்மாற்றி (Transformer) இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மணல் மூட்டைகள் மற்றும் வெள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு Geo tagging செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துதர தயார் நிலையில் உள்ளது. அனைத்து பாதுகாப்பு முகாம்காளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 12 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் மூலம் அறிவிப்புகள்
அடையாறு ஆற்றின் கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு மழை வந்தாலும் நீர் தேக்கம் இன்றி, வெள்ளநீர் தங்கு தடையின்றி செல்ல அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆட்டோக்கள் மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுடைய உடமைகள் மற்றும் பொருட்களை பாதுகாக்க அப்பகுதிகளுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
கட்டுப்பாட்டு அறை விவரம்
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார் அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட கட்டுப்பாட்டு அறைகளின் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறை தொடர்பு கொள்ளும் எண்கள் 044 27237107
044 27237207