EB எண்ணுடன் ஆதார் இணைப்பிற்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு.. அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படுமா?
EB எண்ணுடன் ஆதாரை இணைக்க எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக மின் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இருக்கின்றனர் அதில் ஒரு கோடியே 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மேலும் இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்.
- 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மின்சாரத்துறையிடம் இருந்து மானியம் பெறும் அனைவரும் கட்டாயம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்.
- அவர்கள் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு இணைத்துக் கொள்ளலாம்.
- அதேநேரத்தில் அரசிடம் இருந்து எந்தவிதமான மானியமும் பெறாதவர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்தால் தான் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்றுதான் கட்டணத்தினை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மின் இணைப்பு பெற்றிருப்பவர் இறந்திருந்தால், அவர் இறந்ததற்கான தக்கச் சான்றிதழ்களை சமர்பித்து, பெயர் மாற்றம் செய்த பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம். அதனை இந்த சிறப்பு முகாம்களிலேயே செய்து கொள்ளலாம்.
இந்த அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தில், இந்த திட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். அதேபோல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதாரை இணைக்க வற்புறுத்த கூடாது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், இந்த ஆதார் இணைப்பு என்பது மீட்டருடன் செய்யப்படுவதுதான். வீட்டை காலி செய்யும் போது அதை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். இதன் மூலம் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற முடியும். அனைத்து ஆய்வுகளையும் செய்து ஒப்புதலை பெற்ற பிறகே இந்த திட்டத்தை கொண்டு வந்தோம், என்று வாதம் வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.