(Source: ECI/ABP News/ABP Majha)
AIADMK Meeting: ஒற்றைத் தலைமை வரவேண்டும்; அப்போதுதான் தீர்மானங்கள் நிறைவேறும்: கே.பி.முனுசாமி திட்டவட்டம்
பொதுக்குழு தீர்மானங்களை நிராகரித்துவிட்டதால் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு தீர்மானங்களை நிராகரித்துவிட்டதால் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தலைமை மீதான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது காரில் புறப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். வழியில் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில் இருவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் வந்தார். மேலும் கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதேசமயம் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பிய வரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் முயற்சித்தனர்.
ஒருவழியாகப் பொதுக்குழு கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் வந்த நிலையில், பொதுக்குழு கூடியது. அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''அனைத்துத் தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால், ஒற்றைத் தலைமை வரவேண்டும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தோடு சேர்த்து எப்போது மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறதோ, அப்போதுதான் ஏனைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்'' என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்