சென்னை அருகே அதிர்ச்சி !! ஹோட்டல் உரிமையாளரின் கொடூர செயல் ; கேரள இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை அடுத்த படப்பையில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவர் படப்பை பஜாரில் உள்ள எம்.ஆர். ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது வழக்கம். இதனால் ஹோட்டல் உரிமையாளர் லோகநாதன் ( வயது 36 ) மற்றும் அவரது மனைவியுடன் நட்பாக பழகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற லோகநாதன் அவரை தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் , லோகநாதன் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண், புகார் அளித்ததையடுத்து படப்பை போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.
திருவள்ளூர் ; வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. மேஸ்திரிக்கு 44 ஆண்டு சிறை தண்டனை
ஆந்திர மாநிலம் சித்துாரை சேர்ந்தவர் சந்திரன் ( வயது 65 ) திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் மேஸ்திரியாக பணி செய்து வந்தார். இவர், 2021 ஜூன் மாதம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். கும்மிடிப்பூண்டி போலீசார், சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். விசாரணைக்கு பின், நீதிபதி உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சந்திரனுக்கு 44 ஆண்டு சிறை தண்டனையும், 52,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், சிறுமிக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
சென்னையில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர தாஸ் ( வயது 54 ) கடந்த 2023 ல் 5 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கோயம்பேடு மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது.
போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுபாஷ் சந்திர தாஸ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, அவருக்கு பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ், 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 51,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.