ஏகாம்பரநாதர் கோயிலில் காணாமல்போன மண்டபம் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் ஆய்வு...!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரட்டை திருமாளிகை சீரமைப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவில் செயல் அலுவலர் உடன் விசாரணை நடத்தினர்
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலானது பஞ்சபூத தலங்களுள் இதுவும் ஒன்று. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலை முற்கால சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர பேரரசுகளை சேர்ந்த பல்வேறு அரசர்கள் பல்வேறு கட்டுமானங்களை ஏற்படுத்தி வழிப்பட்டுள்ளனர். பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோயிலுக்கு சொந்தமாக என்னெற்ற நகைகளும், சுவாமி சிலைகளும், பல்வேறு இடங்களில் ஏராளமான நிலங்களும் உள்ளன. இந்த நகைகள், நிலங்கள், சுவாமி சிலைகளை பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள பழமையான இரட்டை திருமாளிகை மண்டபமானது மன்னர்கள் காலத்தில், மன்னர் குடும்பத்தினர் சுவாமியை தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்டது. அரிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட இந்த இரட்டை திருமாளிகை மண்டபம் ஆனது காலப்போக்கில் சிதிலம் அடைந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து விழுந்தது. சிதலமடைந்த இரட்டை திருமாளிகை மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
சிதமலமைடந்த இரட்டை திருமாளிகை மண்டபத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து, அதற்கு, முறையான திட்ட மதிப்பீட்டை தயார் செய்யாமலேயே கடந்த 2014 - 15 ஆம் ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணியை துவக்கினர். இதனைத் தொடர்ந்து மேல் தள சீரமைப்பிற்கு, 79 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சிதலமடைந்திருந்த இரட்டை திருமாளிகை மண்டபத்தில் இருந்த சிற்பங்கள் நிறைந்த பழைய கல்துாண்களை காணவில்லை என்ற புகார் எழுந்தது.
இதனால் காணாமல் போன தூண்கள் குறித்து விசாரிக்க கோரியும், சீரமைப்பு பணிகளுக்கான நிதி செலவுக்கு விளக்கம் கேட்டும் காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்து சமய அறநிலைத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்க்கு தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் செயல் அலுவலர் தியாகராஜன் கும்பகோணத்தில் இருந்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் போலீசார் செயல் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு இரட்டை திருமாளிகையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தொன்மையான கல் தூண்கள் காணாமல்போனது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள்
கடந்த ஜூன் மாதம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் ஆவணங்களில் வராத பல சிலைகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் புதியதாக 16 உற்சவர் சிலைகள் இருப்பது கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. சில ஊழியர்கள் நடத்திய ஆய்வில் விநாயகர், லட்சுமி, 9 நாயன்மார்கள் உள்ளிட்ட 16 சிலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் தோஷம்... அவசரக்கல்யாணம்... வரதட்சணை கொடுமை: புதுமணப்பெண் தற்கொலை!