தமிழகத்தில் 3 வழித்தடங்களில் அதிவேக ரயில்.. சென்னை மெட்ரோ திட்டம்.. 4 மாதங்களில் அறிக்கை..!
மத்திய அரசின் பங்களிப்போடு, செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.
தமிழகத்தில் சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வழித்தடம் உட்பட 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக (பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்காக) சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பங்களிப்போடு, செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரே நேரத்தில் 3 சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வரை 170 கி.மீ. தொலைவுக்கும், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் வரை 140 கி.மீ. தொலைவுக்கும், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வரை 185 கி.மீ தொலைவுக்கும் வழித்தடங்கள் உருவாக்க, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் (தெற்கு) எம்.ராபர்ட் ராஜசேகரன் ஆகியோர் அண்மையில் கையெழுத்திட்டனர். 4 மாதங்களில்.. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, திட்டமிடப்பட்ட ஒவ்வொரு வழித்தடங்களுக்கும் மாற்று வழித்தட விருப்பங்களை ஆலோசகர்கள் ஆய்வு செய்வார்கள். நிலையங்கள், பணிமனைகள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் எளிதாக மாறிச் செல்லும் இடங்கள் ஆகியவை இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த ஆய்வானது, வழித்தடங்கள் தரையில் இயங்க வேண்டுமா, உயர்த்தப்பட்டதாக அல்லது சுரங்கப்பாதையில் இயங்க வேண்டுமா, நிலத் தேவைகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தோராயமான திட்டச் செலவு ஆகியவற்றைத் தீர்மானிக்கும். இத்தடங்களில் அதிவேகத்தில் ரயில் போக்குவரத்துக்கான சூழல், மக்களுக்கான தேவைகள், அதிவேக ரயில் போக்குவரத்தை இயக்க தேவையான சாத்தியக் கூறுகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். பணியை தொடங்கிய நாளிலிருந்து அடுத்த 4 மாதங்களில் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





















