எம்.பி கனிமொழி பிறந்த நாள் !! புறம் காத்தது போதும், அகம் காக்க வா - சுவரொட்டியால் பரபரப்பு
கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன

எம்.பி கனிமொழி பிறந்த நாள்
திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
சுவரொட்டிகளால் பரபரப்பு
“புறம் காத்தது போதும், அகம் காக்க வா”, 'கருத்தியல் யுத்தத்திற்கான கொள்கை வாரிசு' போன்ற வாசகங்கள், அவரை வாழ்த்துவதாக மட்டுமல்லாமல், மாநில அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளதால், இச்சுவரொட்டிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளன.
சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள தலைவர் கலைஞர் இல்லத்தில், திமுக தொண்டர்கள் சுமார் 20 கிலோ எடையுள்ள, “புறம் காத்தது போதும், அகம் காக்க வா” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சிறப்பு பிறந்த நாள் கேக்கை தொண்டர்கள் ஒன்றிணைந்து வெட்டி கொண்டாடினர்.
" தெற்கிலிருந்து மீண்டும் ஒரு சூரியன் சட்டமன்றத்திற்குள் "
கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள வாழ்த்து, கனிமொழி சட்டமன்றத்திற்குள் செல்வது போல சட்டபேபேரவை படம் மற்றும் கனிமொழி படத்துடன் "தெற்கிலிருந்து மீண்டும் ஒரு சூரியன் சட்டமன்றத்திற்குள்" எனும் வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் சட்டமன்றத்தில் போட்டி ?
வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கனிமொழி கருணாநிதி தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவர் தற்போது திமுகவின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















