காஞ்சிபுரத்தில் பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு கொரோனா
’’இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எந்த பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை’’
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் முதல் அலை ஓய்ந்த பிறகு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
Thiruvarur District: குப்பை மேட்டை காடாக்க முயலும் தன்னார்வக்குழு..திருவாரூரில் சுவாரஸ்யம்
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த, சிங்காடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு, 9, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம், இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்தது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் நாளை மாலை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X