சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
"சென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களும் தாமதமாக புறப்படுவதாக புகார் எழுந்துள்ளது"

சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய், சிங்கப்பூர், மும்பை, டெல்லி செல்லும், ஏர் இந்தியா விமானங்கள், 4 மணி நேரத்தில் இருந்து, 7 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்வதால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்வாக காரணங்களால், விமானங்கள் தாமதம் என்று அறிவிக்கப்பட்டாலும், விமானங்களை இயக்க வேண்டிய, பைலட்டுகள் மற்றும் பொறியாளர்கள் இல்லாததால், விமானங்கள் தாமதமாக, இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தாமதமாகும் விமானங்கள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 6.45 மணிக்கு, துபாய்க்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின்பு சுமார் 7 மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 1.30 மணிக்கு, 170 பயணிகளுடன், சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளது.
அதை போல் சென்னையில் இருந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சிங்கப்பூர் புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 6 மணி நேரம் தாமதமாக, இன்று பகல் ல் 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்டிங் பாஸ்கள் வழங்கப்படவில்லை.
இந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு சுமார் 165 பயணிகள் உள்ளனர். அவர்களுக்கு விமானம் தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதால், பயணிகள் யாருக்கும், இதுவரையில் போர்டிங் பாஸ்கள் வழங்கப்படவில்லை. இதனால் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் பயணிகள் தவித்தனர்.
இதைப்போல் 6.15 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்லும், ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 8.05 மணிக்கு, சென்னையில் இருந்து, டெல்லி செல்லும், ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய விமானங்களும், சுமார் 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு தாமதமாக விமானங்கள் புறப்பட்டு சென்றன.
7 மணி நேரம் வரை தாமதம்
இதை போல் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரத்தில் இருந்து, 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ஏற்கனவே விமானிகள், விமான பொறியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பெருமளவு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, தற்போது படிப்படியாக நிலைமை சீரடைந்து வரும் நிலையில், இப்போது ஏர் இந்தியா விமானங்களும், பைலட்டுகள், விமான பொறியாளர்கள் இல்லாமல், விமானங்கள் தாமதமாவது, விமான பயணிகள் இடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















