முகப்புசெய்திகள்சென்னைகள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்... கோரிக்கை வைத்த மாணவி ... தேடி வந்த உதவித்தொகை..!
கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்... கோரிக்கை வைத்த மாணவி ... தேடி வந்த உதவித்தொகை..!
காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த பொழுது, மாணவி ஒருவர் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்.
By : கிஷோர் | Updated at : 30 Oct 2023 03:42 PM (IST)
உதவித்தொகை பெற்ற மாணவி
செங்கல்பட்டு ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. செல்வம் தனியார் விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செல்வம் மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்தநிலையில், இவர்களுடைய இரண்டாவது மகள் கிருத்திகா. வண்டலூர் தனியார் கல்லூரியில் பி. காம் படித்து வருகிறார்.
இந்தநிலையில் கிருத்திகா, உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை குறித்து மனு அளிக்க, கடந்த 18ஆம் தேதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது.
கள ஆய்வுக்காக வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர், திடீரென காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். அந்த சமயத்தில், அங்கிருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார். அதேபோன்று மாணவி கிருத்திகாவிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மாணவி தனக்கு உயர்கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் உடனடியாக அருகில் இருந்த அரசு அதிகாரிகளிடம் மாணவிக்கு, அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார்.
இதனையோடுத்து, மாவட்ட சமூக நல துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, மாணவி உயர் கல்விக்காக முப்பதாயிரம் ரூபாயை காசோலையை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்
இதுகுறித்து மாணவி கிருத்திகா தெரிவிக்கையில், ”இரண்டு வாரத்திற்கு முன்பு காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்திற்காக மனு கொடுக்க சென்றிருந்தோம். அப்பொழுது திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் அங்கே ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார். அப்பொழுது அவர் எங்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்பொழுது எங்களது கோரிக்கையை அவரிடம் முன் வைத்தோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருவது என்றால் பாதுகாப்பு அம்சங்கள் செய்திருப்பார்கள். ஆனால் அது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. அங்கு அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு கூட தெரியவில்லை முதலமைச்சர் அப்பொழுது வருகிறார் என்று, உள்ளே எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, எதேர்ச்சியாக சென்ற பொழுது அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் கோரிக்கை வைத்த இரண்டு வாரத்திற்குள் என்னுடைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. உதவி தொகை தற்பொழுது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி” என மாணவி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.