Chennai Local Train AC: சம்மர்ல குளுகுளுன்னு போலாம்..! சென்னை லோக்கல் ட்ரெயின்ல ஏசி..! கட்டணம் எவ்வளவு தெரியுமா?
Chennai Local Train AC Coach: சென்னைக்கு ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

Chennai Local Train AC: சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை வரும் மார்ச் மாதத்தில் இருந்து, குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மின்சார ரயில்கள்
சென்னை புறநகர் மற்றும் சென்னை மையப் பகுதியை இணைக்கக்கூடிய முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய, மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் சென்னை மற்றும் சென்னை புறநகரை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. அதே போன்று எப்போதுமே இந்த தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த தடத்தில், ஏசி ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது
சென்னையில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள்- Chennai AC local Train
சென்னை ஐ.சி.எப், ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்திற்கு என இரண்டு ரயில்கள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.
பிரதான பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 12 பெட்டிகளை கொண்ட இந்த குளிர்சாதன வசதி கொண்ட ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது.
பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
இந்த மின்சார ரயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்னும் 2 வாரத்தில் சென்னை ரயில் கோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் சோதனை ஓட்டமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்சாதன வசதி கொண்ட ரயில் என்பதால், காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு இந்த ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில்கள் எந்த நேரங்களில் இயக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோடை காலம் வர உள்ளதால் மார்ச் மாதத்திலிருந்து, இந்த ரயில்களை இயக்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இரண்டு வாரத்தில் ரயில் கிடைத்தவுடன் சோதனை ஓட்டம் நிறைவடைந்த உடன், அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டண விவரம் என்ன ? Chennai AC Train Ticket Price
மேற்கு ரெயில்வேயில் குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களுக்கு 9 கிலோமீட்டர் தூரத்துக்கு 35 ரூபாய், 15 கிலோமீட்டர் தூரத்திற்கு 50 ரூபாய், 24 கிலோமீட்டர் தூரத்திற்கு 70 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தெற்கு ரயில்வே இவ்வளவு அதிகமான கட்டணத்தை நிர்ணிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டணத்தை வைத்து பார்த்தால் சென்னையில் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை பயணிக்க 90 ரூபாய் வரை வசூலிக்க வேண்டியது இருக்கும். எனவே கட்டண விவரம் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கட்டண விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

