மீண்டும் தலைமைச் செயலகமாகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை?
கிண்டி கிங் ஆய்வக வளகாத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் முதல்வரின் புதிய அறிவிப்பின் மூலம் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98-ஆவது பிறந்தநாளையொட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 250 கோடி மதிப்பீட்டில் தென்சென்னையில் உள்ள கிண்டி கிங் இன்ஸ்டியூட் ஆய்வக வளாகத்தில் புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றும் திட்டத்தின் முன்னோட்டமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2006-11 திமுக ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்தபோது, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். பின்னர் அந்த கட்டடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கருணாநிதியின் தனிக்கவனத்தால் ஓமந்தூரார் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுவந்த சட்டமன்ற பேரவை மண்டபமும் தலைமை செயலகமும் கடந்த 2010 மார்ச் 13ஆம் தேதியன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் 17 மாத இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு புதிய தலைமைச்செயலம் மற்றும் சட்டமன்ற கட்டங்களை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டது. ஜெயலலிதாவின் இந்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்டது என விமர்சிக்கப்பட்ட நிலையிலும் அவர் 2011 மே 20 அன்று தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையின் செயல்பாடுகளை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
நிர்வாக வசதிக்காக மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்ததாக குறிப்பிட்ட ஜெயலலிதா, புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக தனது முந்தைய அரசாங்கம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் திமுக தடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் 2011 ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜெயலலிதா, பயன்படுத்தப்படாமல் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகம் ஏழை எளிய மக்களின் மருத்துவ வசதிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பிறகு ஓமந்தூரார் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகம் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. மாநில சுகாதாரத்துறையின் முக்கிய மருத்துவ நடவடிக்கைகளும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டங்களும் அங்கு நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு சென்னையில் உச்சத்தில் இருந்த நிலையில் தொற்று பாதித்தவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சேவைகளை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் மூலம் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகம் மீண்டும் தலைமைச்செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளது