மெட்ரோ ரயில் கதவில் கைக்குழந்தையுடன் சிக்கிய தாய்..! அலட்சியமாக பதிலளித்த ரயில்வே ஊழியர்கள்..!
சென்னையில் மெட்ரோ ரயிலின் கதவு இடையே கைக்குழந்தையுடன் சிக்கிய தாய் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் சக பயணிகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கிண்டி வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து உயர்நீதிமன்றம் வழியாக வண்ணாரப்பேட்டை, விம்கோ நகருக்கு சென்றடைகிறது. இந்த நிலையில், நேற்று இரவு உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் கடைசி மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் காத்திருந்தனர்.
அவர்களில் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரியா என்பவர் தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் காத்திருந்தார். அப்போது, மெட்ரோ நிலையத்திற்கு வந்த கடைசி மெட்ரோ ரயிலில் பயணிகள் அனைவரும் ஏறினர். அப்போது, பிரியா தனது கைக்குழந்தையுடன் ஏற முயன்றபோது மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவுகள் தானாகவே மூடிக்கொண்டது.
இதனால், பிரியா தனது கைக்குழந்தை மற்றும் தம்பி மற்றும் மற்றொரு பெண் பயணியான ரெகேனா ஆகிய மூன்று பேரும் மெட்ரோ ரயிலின் கதவுகளுக்குள் இடையே சிக்கிக்கொண்டனர். தானியங்கி கதவு மீண்டும் திறக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு மூன்று பேரையும் ரயிலுக்கு உள்ளே இழுத்தனர்.
இதையடுத்து, ரயில் தானாகவே புறப்பட்டுச் சென்றது. ரயிலின் கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டதால் மூன்று பேருக்கும் கைக்குழந்தை உள்பட மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், புதுவண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்ற பிறகு, கதவு இடையே சிக்கிய பிரியா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மெட்ரோ ரயிலை இயக்கிய இன்ஜின் டிரைவரிடம் நேரில் சென்று கேட்டனர்.
ஆனால், அந்த டிரைவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கு முறையாக பதிலளிக்காமல் அடுத்த நிறுத்தத்திற்கு ரயிலையும் இயக்கிச் சென்றுவிட்டார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பிரியாவும் சக பயணிகளும் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்நிலைய பணியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர்கள் மிகவும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பிரியா, சக பயணிகள் மற்றும் பிரியாவின் உறவினர்கள் புதுவண்ணாரப்பேட்டை ரயில்நிலையத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென 10க்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், விவரம் அறிந்து பிரியாவையும், தனது கைக்குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த அவரது கணவரை மெட்ரோ ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காததால் அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சமாதானம் ஆகிய பயணிகள் கலைந்து சென்றனர். மெட்ரோ ரயில்நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்