One Ticket for All Transport: செப்டம்பர் 22-லிருந்து ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் - விவரம் இதோ
சென்னையில், வரும் 22-ம் தேதி முதல், ஒரே டிக்கெட்டை வைத்து, மாநகரப் பேருந்து, புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில், மாநகரப் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பணகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், வரும் 22-ம் தேதி முதல், ஒரே டிக்கெட்டில், மாநகரப் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோவில் பயணிக்கலாம். அது குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
ஒரே டிக்கெட்டில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோவில் பயணம்
சென்னையில், மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றில், ஒரே டிக்கெட்டின் மூலம் பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ‘கும்டா‘ எனும் போக்குவரத்துக் குழுமம், தனியார் நிறுவனம் மூலம் புதிய மென்பொருளை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில், புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் வெளியில் செல்லும்போது, எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்பதை முன்னரே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை செயலியில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தினால், கியூ.ஆர் குறியீட்டை கொண்ட டிக்கெட், மொபைல் போனில் கிடைக்கும்.
22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் ‘சென்னை ஒன்‘ செயலி
மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில், இந்த கியூ.ஆர் குறியீட்டை காண்பித்து, பயணிகள் பயணிக்கலாம். இந்த புதிய செயலிக்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த செயலிக்கு ‘சென்னை ஒன்‘ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய செயலி வரும் 22-ம் தேதி திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பயணிகளின் பயணங்களை சுலபமாக்கும் இந்த புதிய வசதியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய வசதி, பல பொது போக்குவரத்துகளை பயன்படுத்தி வேலைக்கு செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவசர அவசரமாக வேலைக்கு செல்வோருக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
மேலும், இதனால் நேரம் மிச்சமாவதுடன், சில்லரை தேட வேண்டிய டென்ஷனும் பயணிகளுக்கு இருக்காது. இதனால், பொதுமக்களிடையே இந்த செயலி மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















