இன்று ECR பக்கம் போயிடாதீங்க...! கோவளம் - மாமல்லபுரம் சாலையில் நெரிசல்... நோட் பண்ணிக்குங்க..
ECR TRAFFIC Change : மகாபலிபுரம் அருகே வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ள நிலையில், சென்னை கிழக்கு கடக்கவை சாலையை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது

வன்னியர் சங்கம் சார்பில் இன்று மகாபலிபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மாமல்லபுரம் வரை அக்னி கலசம் பொறித்த வன்னியர் சங்க கொடிகளால் கிழக்கு கடற்கரை சாலை களைகட்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் மயமாக காட்சி அளிக்கிறது. மாநாட்டின் முகப்பில் லட்சக்கணக்கில் கூடும் வன்னியர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை முழுமையாக காணும் வகையில் 16 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
10 லட்சம் பேர் வருவார்கள்
12 ஆண்டுகள் கழித்து வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ளதால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சம் பேருக்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும், மாநாட்டு குழு சார்பில் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் இ.சி.ஆர் சாலையில் பக்கிங்காம் காலவாய் ஒட்டி 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில், 5 இடங்களில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மாநாட்டு நிகழ்ச்சிகளை தொண்டர்கள் அமர்ந்து பார்க்க 2 லட்சம் இருக்கைகள், தரைவிரிப்புகள், போடப்பட்டு உள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் வசதிக்காக 500 மொபைல் டாய்லெட் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதிக்காக 10 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தொண்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன.
கிழக்கு கடற்கரை சாலை பக்கம் போக வேண்டும்
மாநாட்டிற்கு வருபவர்கள் குறிப்பிட்ட வழியில் தான் வர வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வருபவர்கள், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - பூஞ்சேரி -மகாபலிபுரம் வழியாக மாநாட்டு திடல் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வழியாக வருபவர்கள், மதுராந்தகம் -செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - பூஞ்சேரி -மகாபலிபுரம் வழியாக மாநாட்டு திடல் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வழியாக வருபவர்கள், மதுராந்தகம் -செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - பூஞ்சேரி -மகாபலிபுரம் வழியாக மாநாட்டு திடல் வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் வழியாக வருபவர்கள் தாம்பரம் - வண்டலூர் - கேளம்பாக்கம் - கோவளம் வழியாக மாநாட்டை திடல் வரவேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ECR சாலையை பயன்படுத்தாதீர் !
எனவே பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வரும் என்பதால், காலை 10 மணி முதல் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணிப்பது தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.





















