சென்னைக்கு எல்லோருமே ஒன்னுதான்... எல்லோருக்கும் சென்னை ஒன்னுதான்! ஹாப்பி பர்த்டே சென்னை!
வேலையை, வேலை இடத்தில் தேவையான எக்ஸ்போஷரை, அனுபவத்தை கற்றுத் தரும் சென்னை, ஒரே சாலையில் பி.எம்.டபிள்யூ சென்றாலும் ஒரே ரியாக்ஷன் தான், ஆட்டோ ரிக்ஷா சென்றாலும் ஒரே ரியாக்ஷன் தான் கொடுக்கும்.
சென்னை – இந்த ஊர் எத்தனை பேருக்கு அடைக்களம் கொடுத்ததோ அத்தனை பேரிடம் இருந்தும் வசைச் சொற்களையும் கேட்டுள்ளது, கேட்டுக் கொண்டு இருக்கிறது.
“இந்த ஊர்ல மனுஷன் வாழ்வானா?”
“என்ன க்ளைமேட் இது”
“தண்ணி சரியில்ல”
“இங்க இருக்க மக்களுக்கு ஈவு இரக்கமே இல்ல”
“வெயில் அடிச்சு தள்ளுது”
“உதவினு கேட்டா யாரும் வர மாட்டங்க”
“சென்னை ரொம்ப காஸ்ட்லி”
இன்னும் பல!
இப்படி சென்னையைப் பற்றியும், சென்னை மக்களைப் பற்றியும் தினந்தினம் திட்டித் தீர்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இங்கு கூறப்பட்டுள்ள குறைகள் எல்லாம் சென்னையை ஸ்டீரியோடைப் செய்துவிட்டன.
இந்த குறைகள் எல்லாம் சென்னையில், சென்னைக்கு மட்டும்தான் பொருந்துமா? அதுதான் இல்லை. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும்தான் இது மாதிரியான பிரச்சனைகள் இருக்கும் என்று யாராவது சொன்னால், அது பொய் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்வது! அவர் மாநிலத்தின்வேறு எந்த மாவடத்திற்கும் சென்றிருக்க மாட்டார் போல!
சரி, அப்ப சென்னை என்ன மாதிரியான ஊரு? பார்ப்போம்!
மற்ற மாவட்டங்களில் இருப்பது போல, உறவுக்காரர்களும், பக்கத்து வீட்டாரும் எடுத்த எடுப்பிற்கு எல்லாம் வீட்டிற்கு வருவது, அட்வைஸ் கொடுப்பது, முக்கியமான முடிவுகளில் தலையிடுவது என எதுவும் சென்னையில் பெரும்பாலும் இருக்காது. இங்கு, ஒருவரை, ஒரு குடும்பத்தை ‘அன்பு, பாசம், அக்கறை’ என்ற பெயரில் அவர்களது குடும்ப விஷயங்களில் மூக்கை நுழைப்பதைவிட, அவர்கள் சுயமாக முடிவு எடுக்க ஸ்பேஸ் கொடுப்பதுதான் சென்னையும், சென்னை மக்களும். இங்கு வாய் திறந்து உதவி கேட்டால், இல்லை என மறுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால், தானாக வழிய வந்து உதவி செய்பவர்கள் குறைவே!
விழுந்தால், எழுந்து வா என்று சொல்லும் சென்னை, மீண்டும் விழாமல் இருக்கவும், விழுந்தால் என்ன செய்ய வேண்டும் எனவும் கற்றுக்கொடுத்துவிடும். எப்பொழுதும் ஒருவரை எதிர்பார்த்து இருக்க கற்றுக்கொடுக்கவில்லை சென்னை. இதுவும் நல்லதுதான!
சென்னை பற்றிய மற்றொமொரு முக்கிய புகார், க்ளைமேட். வேளச்சேரியில் வீடு இருந்து, பிராட்வேயில் உள்ள அலுவலகத்திற்கு மழை காலத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா நீங்கள்? வீட்டில் புறப்படும்போது மழை பெய்து- வந்தால், கிண்டி கத்திப்பாரா ஏறி இறங்கும்போது வெயில் அடித்துக் கொண்டிருக்கும். ஒரே நேரத்தில், மழை வெய்யிலை காணக் கிடைப்பது எல்லாம் சென்னையின் வழக்கமான ஸ்டைல். மழையில் நனைந்து கொண்டு அலுவலகம் செல்வதற்குள் வழியிலேயே துணி காய்ந்துவிடுவது எல்லாம், பக்கா சென்னை பழக்கம்! அட்ஜஸ்ட் பண்னிக்கலாமே ப்ரண்ட்ஸ்!
சென்னை காஸ்ட்லி இல்லை. தேடிச் சென்று வாங்க நிறைய இடங்கள் இருக்கின்றது. நிறைய மொத்த விலை கடைகள், மார்க்கெட்டுகள், சந்தைகள் என ஒவ்வொரு பொருளுக்குமான பிரத்யேக இடங்கள் சென்னையில் இருக்கின்றது. குறைந்த விலையில், தரமான பொருட்கள் வீட்டிற்கே வந்து சேராது என்றாலும், சென்னையை சுற்றினால், டைம்-பாஸ் ஆகிவிடும், ஷாப்பிங்கும் செய்து விடலாம். சென்னையின் பிரதான இடங்களை கனெக்ட் செய்யும் பேருந்து வழித்தடங்களும், எலக்ட்ரிக் இரயில்களும், பறக்கும் இரயில்களும், மெட்ரோ, ஷேர்-ஆட்டோக்களும் இருக்கின்றது. ஊர் சுற்ற சுற்ற சலிக்காது சென்னை.
டிராபிக் நெரிசல், மக்கள் கூட்டம் என இன்னும் எத்தனை குறைகள் இருந்தாலும், அவற்றை தூக்கி சாப்பிடும் அளவிலான நல்ல விஷயங்களும் சென்னையில் நிறையவே உள்ளது. வேலையை, வேலை இடத்தில் தேவையான எக்ஸ்போஷரை, அனுபவத்தை கற்றுத் தரும் சென்னை, ஒரே சாலையில் பி.எம்.டபிள்யூ சென்றாலும் ஒரே ரியாக்ஷன் தான் ஆட்டோ ரிக்ஷா சென்றாலும் ஒரே ரியாக்ஷன் தான் கொடுக்கும்.
ஏன்னா, சென்னைக்கு எல்லோருமே ஒன்னுதான்... எல்லோருக்கும் சென்னை ஒன்னுதான்! ஹாப்பி பர்த்டே சென்னை!
படங்கள்: நந்தகுமார்