Chembarambakkam Lake: தொடங்கியது மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake Water Level: மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது.
செம்பரபாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 16.47 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 1.812 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 415 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புழல் ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2394 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று வினாடிக்கு 95 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 404 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.சென்னை குடிநீருக்காக 219 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கனமழை எச்சரிக்கை என்ன ?
13.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.