மேலும் அறிய
Watch Video | சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்.. காரணம் என்ன?
பாலாறு பாலம் சீரமைக்கப்படுவதால் ஒரு பாலத்தின் வழியாக அனைத்து வாகனமும் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை_திருச்சி_சாலையில்_போக்குவரத்து_நெரிசல்
செங்கல்பட்டை அடுத்த இருகுன்றபள்ளி அருகே பாலாற்றில் 1955-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் பின்னர் 1986-ம் ஆண்டு அதன் அருகிலேயே மற்றொரு பாலம் அமைக்கப்பட்டது. பழைய பாலத்தின் மீது சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், புதிய பாலத்தில் திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும் வந்து செல்கின்றன. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் அதிகளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பழைய பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும் பாலத்தில் உள்ள 12 இணைப்பு பகுதிகளும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து இந்த பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று முதல் சென்னை- திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை என இரு மார்க்கமாக வரும் வாகனங்கள் ஒரே பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் pic.twitter.com/5OwwUm9td7
— Kishore Ravi (@Kishoreamutha) February 7, 2022
பாலத்தை சீரமைக்கும் பணி 20 முதல் 40 நாட்கள் வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சீரமைப்பு பணிகள் நடைபெறும் நாட்கள் முழுவதும் ஒரே பாலத்தில் இரு மார்க்கமாகவும் வாகனங்கள் சென்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ,திண்டிவனம், கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் வருகின்ற 20 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி, மரக்காணம் வழியாக செல்ல காவல் துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















