ABP NADU IMPACT : கிளாம்பாக்கத்தில் தவித்த மக்கள்..! செயல்பாட்டிற்கு வந்த ஏடிஎம்கள்..!
ABP NADU IMPACT கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஏடிஎம்கள் செயல்பாட்டிற்கு வந்தன
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam new bus terminus )
சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஏ.டி.எம் பிரச்சனை
ஆரம்பத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் இல்லாதது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட யு.பி.ஐ மூலமாக, பணத்தை செலவு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லும்போது பணம் கொண்டு செல்வது கிடையாது. பேருந்து பயணங்கள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டுமே, பணம் தேவைப்படுவதால்,கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் இல்லாதது பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து தற்காலிக நடமாடும் ஏடிஎம் வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்பொழுது ஏடிஎம் வைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஐந்து ஏடிஎம்கள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் தற்பொழுது ஒரு ஏடிஎம் எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டு முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பொதுமக்கள் கடும் அவதி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு ஏடிஎம் மட்டும் இருப்பதால்,எப்பொழுதும் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக அளவு பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய வார இறுதி நாட்களில், டிஎம்மில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் வாசலில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் காத்திருந்த செய்தியை நமது ஏ.பி.பி நாடு நிறுவனம் வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து பல்வேறு ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் 5 ஏடிஎம்களும் அமைக்கப்பட்டுள்ளன.