(Source: ECI/ABP News/ABP Majha)
கிணத்த காணோம் கதை..! அத்திவரதர் கோவில் நிலங்கள் தொடர்பாக மாறுபட்ட ஆர்.டி.ஐ தகவல்களால் குழப்பம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் குறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களால் மாறுபட்டுள்ளதால் பக்தா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில், என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில், திருக்கோயிலுக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.
திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும், நிலங்களில் இருந்து பெறப்படும் வாடகை பாக்கி விவரங்கள் எவ்வளவு என்பது என்பது குறித்து கோவில் வளாகத்தில் விளம்பரப் பலகையை வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பல முக்கிய கோவில்களில் பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நிலங்கள் எவ்வளவு, வாடகை பாக்கி எவ்வளவு நிலுவையில் உள்ளது மற்றும் சொத்து விவரம் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டது. ஆனால் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டும், இதுபோல் சொத்து விவரம் அடங்கிய பதாகைகள் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த அ. டில்லிபாபு என்ற பக்தர் கடந்த 2019 ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி அன்று , தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், வரதராஜ பெருமாள் கோவிலில், விண்ணப்பித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், வீட்டுமனைகள் எத்தனை ?. வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான வருவாய் ஆவணங்களின்படி எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது. மொத்த சொத்தின் மதிப்பு எவ்வளவு. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. கோவில் நிலம் குறித்த பதிலுக்கு, 448.43 ஏக்கர் நிலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி (16-08-2021) மற்றொரு பக்தர் அண்ணாமலை என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மொத்தம் எத்தனை ஏக்கர் உள்ளது என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு, 177.20 ஏக்கர் என, கோவில் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கேள்விக்கு இருவித பதில் அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலரிடம் கேட்டபோது, 'கோயில் சொத்துகள் எதுவும் மாயமாகவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கொடுத்துள்ள தகவல்தான் தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம்' என சொல்லப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X