Chengalpattu: மழையில் இந்த தப்ப பண்ணீங்கன்னா அவ்வளவுதான்.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Chengalpattu Red Alert: மழை நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் 15,16,17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மதுராந்தகம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வருகின்ற காட்சியை பார்க்க முடிகிறது. ஒரு சில இடங்களில் முன்னேற்றக் கூடிய நடவடிக்கை காரணமாக, கால்வாய் வழியாக மழைநீர் செல்லக்கூடிய நிலையும் இருந்து வருகிறது.
நாளை ரெட் அலர்ட்
இந்தநிலையில் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று மாலை தொடங்கி நாளை வரை தொடர்ந்து அதிக அளவு மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன ?
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கான கிராம/வார்டு அளவிலான வரைபடங்கள் தயார் நிலையில் வைத்திருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மிகவும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை தேர்வு செய்து 11 துறைகள் ஒருங்கிணைத்து 33 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 390 பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், 290 பாதுகாப்பு மையங்கள், மருத்துவ குழுவினர்கள், படகுகள், ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்க தயார் நிலையில் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு, பிரட், பிஸ்கட், தண்ணீர், மருத்துவர்கள் போன்ற பொருட்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எல்லா மருத்துவமனைகளிலும் மருந்து பொருட்கள் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அதிரடி
பொதுமக்கள் தொடர் மழை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் வாங்கி வருகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் பொருட்களும் தீர்ந்து வருகிறது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களின் விலையை கூட்டி விற்பனை செய்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு
பொதுமக்கள் பெருமழையினால் ஏற்படும் அவசரநிலை தொடர்பான உதவிகளுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அவசர உதவி, புகார்கள் மற்றும் தகவல்களை கீழ்க்காணும்எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்:
கட்டணமில்லா
தொலைபேசி எண்: 1077
தொலைபேசி : 044 _ 2742 7412
எண்கள் 044-2742 7414
Whatsapp எண் : +91 94442 72345