உள்துறை அமைச்சகத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்.. என்ன நடந்தது?
கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி அமிதாப் தாகூர், ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் ராகேஷ் சங்கர் ஆகிய மூன்று அதிகாரிகளுக்கு இந்தப் பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முறையே 2028, 2023 மற்றும் 2024-இல் பணி ஓய்வு பெற வேண்டியவர்கள்.
மத்திய உள்துறை அமைச்சகம் உத்திரப்பிரதேசத்தின் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அவர்களது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பணி ஓய்வு கொடுத்துள்ளது. மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பதவி வகிக்கத் தகுதியில்லாதவர்கள் என்பதால் பொதுநலன் கருதி அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்திந்தியப் பணிகளுக்கான விதிகள் 1958 விதி 16(3)-இன் கீழ் கடந்த மார்ச் மாதம் 17-ஆம் தேதி அமிதாப் தாகூர், ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் ராகேஷ் சங்கர் ஆகிய மூன்று அதிகாரிகளுக்கு இந்தப் பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முறையே 2028, 2023 மற்றும் 2024-இல் பணி ஓய்வு பெற வேண்டியவர்கள்.
"अमिताभ ठाकुर को लोकहित में सेवा में बनाये रखे जाने के उपयुक्त न पाते हुए लोकहित में तात्कालिक प्रभाव से सेवा पूर्ण होने से पूर्व सेवानिवृत किये जाने का निर्णय लिया गया है." pic.twitter.com/nkPFTBIuvk
— AmitabhThakur (@Amitabhthakur) March 23, 2021
பணி ஓய்வு ஆணையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிதாப் தாகூர். சிவில் பாதுகாப்புத்துறை இணை ஐ.ஜியாகப் பதவி வகிக்கும் தாகூர் தனக்குப் பணி ஓய்வு தரவேண்டும் என்பதற்காகவே உயர்பதவியில் இருப்பவர்கள் தன்னைச் செயல்படவிடாமல் தடுத்து வந்ததாகவும் 2019-இல் இந்திய அரசுக்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்திலேயே இது பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் இந்த நடவடிக்கை தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றும், மேலும் இந்த ஆணையின் மீது வழக்கு தொடர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய பாஜக அரசுக்கு எதிராகவும் அதற்கு முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வந்தவர். 13 ஜூலை 2015-இல் அப்போதைய உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த முலாயம் சிங் தன்னைப் பதவி விலகச் சொல்லி மிரட்டியதாக இருவருக்குமான உரையாடல் அடங்கிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் அமிதாப்.
உத்திரப்பிரதேசத்தின் முன்னணி அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுடனான இவரது உறவு சுமூகமாக இல்லாததே இந்த வலுக்கட்டாயப் பணி ஓய்வுக்குக் காரணம் என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு கொடுக்கப்பட்ட மற்ற இரு அதிகாரிகளும், இந்த அறிவிப்பின் மீதான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.