Rudra Thandavam Review: ’ருத்ர தாண்டவம் ரிலீஸ்’ - வென்றது சட்டமா, தர்மமா..?
Rudra Thandavam Review: வழக்கமான ஹீரோ வில்லன் சப்ஜெக்ட் தான் என்றாலும் பலாப்பழத்தை திருப்பி போட்டது மாதிரி தன்னுடைய கருத்துகளை படத்தில் சொருகியிருக்கிறார் மோகன் ஜி.
Mohan G
Richard Rishi, Gautham Vasudev, Radha Ravi, Dharsha Gupta, Thambi Ramaiah, Deepa
Rudra Thandavam Movie Review: சென்னை நகரில் உள்ள போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்கிறார் ருத்ர பிரபாகரன் (ரிச்சார்டு ரிஷி). போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது, ஒரு பிசிஆர் வழக்கில் சிக்கிக்கொள்கிறார். அந்த வழக்கில் இருந்து தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? போதைப்பொருள் தடுப்பு சாத்தியமானதா? என்பதே ருத்ர தாண்டவத்தின் கதை. இதைத்தவிர வன்கொடுமை தடுப்புச் சட்டம், மதமாற்றம், நாடக காதல் ஆகியவை ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படத்தின் கிளைகள்.
’திரெளபதி’ படத்திற்கு பிறகு மோகன். ஜி இயக்கிய அடுத்த திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. வழக்கம் போல டிரெய்லரும், ப்ரோமோஷனும் சர்ச்சைகளை கிளப்பிவிட படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இரண்டாவது முறையாக, மோகன் ஜி, ரிச்சார்டு ரிஷி கூட்டணி இணையும் ருத்ர தாண்டவம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
பொது இடத்தில் போதைப்பொருள் விற்றதற்காக இளைஞர்கள் மாறன், மதியை கைது செய்கின்றார் ருத்ரன். அவர்களை துரத்திப் பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தால் மாறன் வலிப்பு ஏற்பட்டு இறந்துவிடுகிறான். சாதிய காரணத்தால்தான் மாறனை ருத்ரன் கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர், நியாயம் கேட்கின்றனர். அரசியல் அழுத்தம் காரணமாக ருத்ரன் கைது செய்யப்படுகிறார். அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறது.
உண்மையில் நடந்தது என்ன?, இந்த வழக்கால் பதவி பறிபோய் சிறைக்கு செல்லும் ருத்ரன், இந்த வழக்கில் வென்றாரா? அந்த இளைஞனின் சாவிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுப்பிடிக்கிறாரா? அரசியல் அழுத்தம் ஏற்பட காரணம் என்ன ? சாதி பிரச்சனையாக இச்சம்பவம் உருமாறியது எப்படி?போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வாதாபியை (கவுதம் வாசுதேவ்) என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ருத்ரனாக ரிஷி ஓரளவு கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். ருத்ரன் மனைவியாக தர்ஷா குப்தாவுக்கு, அதே வழக்கமான ‘மனைவி’ கதாப்பாத்திரம். ருத்ரனோடு படம் முழுவதும் வரும் காவல்நிலைய ரைட்டரான ஜோசப் (தம்பி ராமையா) அவ்வளவாக சோபிக்கவில்லை. கவுதம் வாசுதேவை எதற்கு இந்த படத்திற்கு வில்லனாக போட்டார்கள் என்றே தெரியவில்லை. மாறனின் அம்மாவாக தீபா, ஓவர் ஆக்டிங் செய்யாமல் சிறப்பாக நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடும் இத்திரைப்படத்தில் ஒரு கமர்சியல் மசாலா படத்திற்கான ஆக்ஷன், குடும்பம், அன்பு, பாசம், எமோஷனல் என பல அம்சமும் அடங்கி இருந்தாலும், எமோஷனல் கண்டெண்ட்டை மட்டுமே நம்பி படம் எடுத்திருப்பது படத்தின் மைனஸ். மனசாட்சியுள்ள காவல் ஆய்வாளராக ருத்ரன், மனசாட்சியின் வழி நடக்கும் மாறனின் அம்மா என ஒரே மனசாட்சி, மனசாட்சி என எமோஷனல் லைனை மட்டுமே நம்பி படம் நகர்கிறது.
போதைப்பொருள் மாஃபியா நடக்கும் இடமும், அதில் ஈடுபடுபவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக சித்தரிப்பது, “ஒற்றுமையா வாழவிடுங்க” என மெசேஜ் சொல்லிவிட்டு மேலோட்டமாக சாதியின் இருப்பு கட்டாயம் என சொல்ல முனைவது, முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இது போல, இந்துக்கள், இந்து கடவுள் நம்பிக்கை செண்ட்டிமெண்ட்டுகள் படமெங்கும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துக்களை திட்டமிட்டு மதமாற்றம் செய்கின்றனர் என வைக்கப்பட்டுள்ள சீன்களில் எல்லாம் இயக்குநரின் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.
டெக்னிக்கலாக, ஃபருக் பாஷாவின் ஒளிப்பதிவு, தேவராஜின் எடிட்டிங் சிறப்பாக இருந்தது. ஜூபினின் பின்னணி இசை, வசனங்களை கேட்கவிடாமல் அளவுக்கு அதிகமாக ஒலித்தது. வழக்கமான ஹீரோ வில்லன் சப்ஜெக்ட் தான் என்றாலும் பலாப்பழகத்தை திருப்பி போட்டதுமாதிரி தன்னுடைய கருத்துகளை படத்தில் சொருகியிருக்கிறார் மோகன் ஜி. முதல் பாதி சீரியல் போல நகர்ந்தாலும், இரண்டாம் பாதி திரைப்பட பாணியில் இருப்பதாக தோன்றுகிறது! படத்தை பார்த்தால் சட்டம் வென்றதா தர்மம் வென்றதா, இல்லை இரண்டுமே தோற்றதா என்பது சட்டென புரிந்துவிடும்!