Yaanai Mugathaan Review: நாத்திகவாதிகளுக்கு அட்வைஸா..? எப்படியிருக்கு யானை முகத்தான் திரைப்படம்? சுடச்சுட விமர்சனம் இதோ!
Yaanai Mugathaan Review in Tamil: யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை முகத்தான் படத்தின் சுடசுட விமர்சனம் இதோ.
Rejishh Midhila
Yogi Babu, Ramesh Thilak, Urvashi, Karunakaran
‘இன்னு முதல்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம், யானை முகத்தான். மலையாளத்தில் லால் பகதூர் சாஸ்த்ரி, வரிக்குழியிலே கொல பாதகம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜேஷ் மிதில்லா, முதல் முறையாக நடிகர் யோகி பாபுவுடன் கைக்கோர்த்து தமிழில் களமிறங்கியுள்ளார். இதில் ரமேஷ் திலக், ஊர்வசி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில், தெய்வத்திற்கும் மனிதனுக்குமான பிரச்சனையை காமெடி கதை வடிவில் கூற முயற்சித்துள்ளார் இயக்குநர். அந்த முயற்சி வெற்றி பெற்றதா? வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.
கதையின் கரு:
சென்னையில் ஊரெல்லாம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞர் கணேசன் (ரமேஷ் திலக்). விநாயகர் பக்தரான இவர், தனது அனைத்து பிரச்சனைகளையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என கடவுளிடம் தினமும் வேண்டுகோள் வைக்கிறார். ஒரு நாள், விநாயகர் சிலை, புகைப்படம் எதுவும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. துடிதுடித்து போன கணேசிற்கு யோகி பாபு வடிவில் நேரில் காட்சி தருகிறார், விநாயகர். அடுத்து என்ன நடந்தது? கணேசன் திருந்தி வாழ்ந்தாரா? கணேசனை காண விநாயகர் நேரில் வந்தது ஏன்? போன்ற கேள்விகளுக்கு காமெடியாக விடையளிக்க முயற்சித்து கோட்டை விட்டிருக்கிறார், இயக்குநர்.
மெதுவான திரைக்கதை:
வழக்கமாக படத்தின் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்வது சகஜம்தான். அதற்கென்று இவ்வளவு மெதுவாகவா நகர்வது? என ரசிகர்களை கோபம் கொள்ள வைக்கிறது, படத்தின் முதல் பாதி. காமெடி-ஃபேண்டசி படம் என கூறிவிட்டு, சிரிப்பு வருவது போல ஒரு இடத்தில் கூட வசனத்தை வைக்காதது பெரும் குறையாக தோன்றுகிறது. சரி, யோகி பாபுதான் அந்த விநாயகர் என்று தெரிந்த பிறகு கொஞ்சமாவது சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை மொத்தமாக நாமம் சாத்தியுள்ளனர். மலையாளத்தில் வொர்க்-அவுட் ஆகிவிட்டது என்பதற்காக அந்த ஃபார்முலாவை இங்கே உபயோகிக்கலாமா? என இயக்குநரை கேட்க தோன்றுகிறது.
“சிரிப்பே வரலியே..”
எந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்தாலும் தனது இயல்பான உடல் மொழியினாலும் அவ்வப்போது கொடுக்கும் காமெடி கவுண்டர் வசனத்தினாலும் ரசிகர்களை ஈர்ப்பவர், ரமேஷ் திலக். அவரிடத்திலேயே இந்த மொத்த படத்தையும் தோளிள் தூக்கி சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வேலையை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கும் இவர், ரசிகர்களை சிரிக்க வைக்க தவறி இருக்கிறார். யோகி பாபுவோ ஆங்காங்கே திரையில் தோன்றுவது, எப்போதாவது காமெடி செய்வது என்று படத்தில் நடித்திருக்கிறார். ஊர்வசி, கருணாகரனுக்கு ஸ்க்ரீன் டைமிங் இன்னும் கொஞ்சம் நிறையவே கொடுத்திருக்கலாம். இத்தனை காமெடி நட்சத்திரங்கள் படத்தில் இருந்தும், ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் கடு கடுவென முகத்தை வைத்து கொண்டுதான் படத்தை பார்க்கின்றனர், ரசிகர்கள்.
சென்னையில் ஆரம்பித்து ராஜஸ்தான் வரை ரசிகர்களை இழுத்துச்சென்று கதை சொல்லும் டைரக்டர், அந்த காட்சிகளை கொஞ்சமாவது ரசிக்கும் படியாக வைத்திருக்கலாம். “உன் உள்ளம்தான் கடவுள்.. உனக்குள் கடவுளைத் தேடு..” என்று இப்படத்தில் கூறியுள்ள கருத்துகள் எல்லாம் எல்லா சினிமாவிலும் ஏற்கனவே தூசுதட்டியதுதான்.
நாத்தீகவாதிகளுக்கு அட்வைஸ்..?
“கடவுள் இல்லன்னு சொல்வறவன் கூட இப்போ கடவுள நம்ப ஆரம்பிச்சுட்டான்…” போன்ற டைலாக்குகள், சுய நினைவுடன்தான் எழுதப்பட்டதா? என கேள்வியெழுப்ப வைக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை உட்கார வைத்து தூக்கம் வரும் அளவிற்கு அட்வைஸ் போன்ற கருத்துகளை சொல்லும் இப்படம், மதம் சார்ந்த கருத்துகளை கூறாததை மட்டுமே ப்ளஸ் பாய்ண்டாக பார்க்க முடிகிறது. “கடவுளை வைத்து எடுக்கப்படும் மெகா சீரியல்கூட ஓரளவிற்கு பரவாயில்லை போலும்” என்ற எண்ணம் இப்படம் பார்ப்பவர்கள் மனதில் கண்டிப்பாக தோன்றும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. படம் முடிந்தவுடன் எழுந்து வெளியில் செல்பவர்கள், “ஆளை விடுங்கடா சாமி” என்று வாய்விட்டு சொல்லாத குறையாக தலைதெறித்து ஓடுகின்றனர்.
மொத்தத்தில், பொறுமை சாலிகளின் பொறுமையையும் ஏக அளவில் சோதிக்கிறது யானை முகத்தான் படத்தின் கதை.
மேலும் படிக்க: Deiva Machan Review: இறப்பை முன்கூட்டியே அறியும் ஹீரோ.. தங்கை கணவரின் உயிரை காப்பாற்றுவாரா? - தெய்வ மச்சான் பட விமர்சனம் இதோ..!