Web Movie Review: சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை சுவாரஸ்யம் கூட்டியதா... நட்டியின் ‘வெப்’ திரைப்படம் எப்படி இருக்கு?
Web Movie Review in Tamil: நட்டி நட்ராஜ் உடன் ஷில்பா மஞ்சுநாத் முதன்முறையாக இணைந்துள்ள வெப் திரைப்படம் எப்படி இருக்கு?
Haroon
Natty Natarajan, Shilpa Manjunath, Mottai Rajendran, Subapriya Malar, Shashvi Bala, Bharatha, Aananya Mani.
நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், நடிகைகள் ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வெப் (Web)
வி. எம். முனிவேலன் தயாரிப்பில் ஹரூன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனமீர்த்த நிலையில், படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்!
கதைக்கரு
ஐடி வேலை, வீக் எண்ட் பார்ட்டிக்காகவே வேலை செய்வது, மது,போதைப் பொருள்கள் என வாழ்க்கையை ஓட்டி வரும் மூன்று பெண்கள், டீட்டோலரான தங்கள் மற்றொரு தோழியையும் குடிக்க வைத்து ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர்.
நட்டி நட்ராஜ் - அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தி, தூங்க வைத்து தொடர் டார்ச்சர் செய்கின்றனர். ஏற்கெனவே இந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகிறார்.
இடையில் சில கொலைகளையும் செய்கிறார். இந்த சூழலில் நட்டி எதற்காக இப்பெண்களைக் கடத்தினார்? இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? சைக்கோ வில்லன் நட்டியின் பின்புலம் என்ன? இந்தப் பெண்கள் எப்படி அங்கிருந்து தப்பித்தார்கள் என்பனவற்றை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் நடந்தது என்ன?
நடிப்பு
சைக்கோ வில்லனை ஒத்த கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ஹீரோவா, வில்லனா எனக் குழம்ப வைக்கும் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ். சைக்கோ வில்லனாக ஆய்.. ஊய்.. என ஒரே மாதிரியான ரியாக்ஷன் கொடுத்து முதல் பாதியில் நம்மை சோதிக்கிறார். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார்.
மது, போதை என சுதந்திரமாக அலப்பறை பண்ணி திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட நான்கு பெண்கள் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நட்டி கதாபாத்திரத்துக்கு பயப்படாமல் திமிராக எதிர்கொள்வது, தன் அம்மாவை மிஸ் செய்து அழுவது என ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளில் ஸ்கோர் செய்து நம்மை ஆறுதல்படுத்துகிறார்.
கதாபாத்திரங்கள்
முதல் பாதி முழுக்க எளிதில் யூகிக்க முடியும் காட்சிகள் நம்மை டயர்டாக்குகின்றன. சைக்கோ வில்லனிடம் இருந்து கடத்தப்பட்ட பெண்கள் தப்பிக்க முயற்சி எடுப்பது, சண்டை போடுவது, சரணடைவது என முதல் பாதி முழுக்க தேய்ந்த ரெக்கார்ட் காட்சிகளுடன் செயற்கையான நடிப்புமே மேலோங்கி இருக்கிறது.
ஈவு இரக்கிமின்றி கொடுமைப்படுத்தும் சைக்கோ வில்லன் என்பதை நிறுவவதற்காக நட்டியை முதல் பாதி முழுக்க பயமுறுத்த வைத்துக் கொண்டே இருப்பது சலிப்பு! அவர் யாருன்னு தெரியுமா எனத் தொடங்கும் ஃப்ளாஷ்பேக் நம் பொறுமையை வெகுவாக சோதித்த பின் தான் வருகிறது.
நிறை, குறை
படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில் தோன்றி காமெடி செய்து சென்று தன் பங்குக்கு நம்மை சோதிக்கிறார். கொஞ்சமும் சுவாரஸ்யம் கூட்டாத திரைக்கதை லூப் மோடில் ஒரே இடத்தில் பயணித்து, இரண்டாம் பாதியில் கொஞ்சம் நம்மை தெளிய வைக்கிறது.
இசை கார்த்திக் ராஜா என்பது நம்பும்படியாக இல்லை! போதை, ராஷ் டிரைவிங் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் வழக்கம்போல் பெண்களுக்கு மட்டுமே வகுப்பெடுப்பது ஆண் மையப் பார்வையை மட்டுமே நிறுவுகிறது.
இறுதியில் வரும் மிகப் பெரும் திருப்பம் நம்மை ஏமாற்றிய உணர்வைத் தருவதுடன், படத்தில் இருக்கும் ஓட்டைகளையும் நம்மைக் கேள்வி கேட்க விடாமல் இக்கட்டான சூழலுக்குத் தள்ளி விடுகிறது!