Pattathu Arasan Review: பட்டைய கிளப்பியதா பட்டத்து அரசன்; அதர்வா ஆடியது கபடியா.. இல்ல..? - திரை விமர்சனம்!
Pattathu Arasan Review in Tamil: அதர்வாவின் நடிப்பில் சற்குணம் இயக்கதில், வெளியாகியுள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தின் சுட சுட திரை விமர்சனம்.
A. Sarkunam
Rajkiran, Atharvaa, Sarkunam, Ghibran, Lyca Production
கதையின் கரு:
காளையர் கோவில் எனும் ஊரில், சிறந்த ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர் பொத்தாரி (ராஜ்கிரண்). பேரன், பேத்தி, மகன் மகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் பொத்தாரிக்கு 2 மனைவிகள். மூத்த தாரமும் அவரது மகனும் இறந்து விட, மருமகளும் (ராதிகா) பேரன் சின்னதுரையும் (அதர்வா) பழைய குடும்பத்து சண்டையினால் தனியாக வசிக்கின்றனர். அதர்வா, குடும்பத்தை ஒன்று சேர்பதற்காக எவ்வளவு போராடினாலும், சின்னதுரையை ஏற்க, பொத்தாரியின் குடும்பம் மறுக்கின்றது.
பல நாட்கள் தோற்கடிக்க முடியாத அரசகுலம் என்ற ஊரை கபடிப் போட்டியில் தோற்கடித்ததால், ஊராட்சி மன்ற தலைவரை விட பொத்தாரிக்கு ஊரில் அதிக மரியாதை. பொத்தாரியைத் தொட்டு அவரது மூன்று தலைமுறையினரும் கபடிப் போட்டியில் கொடிக்கட்டி பறப்பது, அவரது முன்னாள் நண்பருக்கு (ஊர் பிரசிடன்ட்) பிடிக்காமல் போகிறது. மகன், மகள், பேரன், பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழும் பொத்தாரி, அதர்வா மற்றும் அவரது அம்மா ராதிகாவை மட்டும் குடும்பத்திலிருந்து பழைய குடும்ப பிரச்னை காரணமாக ஒதுக்கி வைக்கிறார்.
பொத்தாரியின் பேரன், செல்லையாவிற்கு புரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இது, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சடகோபனுக்கு பிடிக்காமல் போக, தாத்தாவுடன் சேர்ந்து, சதித்திட்டம் தீட்டி பொத்தாரியின் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அளவிற்கு செய்துவிடுகிறான். ப்ரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் செல்லைய்யா இழக்கிறான்.
இதனால் மனமுடையும் செல்லைய்யா, தற்கொலை செய்து கொள்கிறான். தனது தம்பி அப்பாவி என்று நிரூபிக்க ஊரை எதிர்த்து, தன் குடும்பமே கபடி போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என சவால் விடுகிறார், கபடியே விளையாடத் தெரியாத ஹீரோ அதர்வா. இறுதியில் வென்றது யார்? வில்லன்களின் உண்மையான முகம் ஊர் மக்களுக்கு தெரிந்ததா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது க்ளைமேக்ஸ்.
குடும்பக்கதையா? கபடிக் கதையா?
வாகை சூடவா, சண்டி வீரன் உள்ளிட்ட நல்ல படைப்புகளை மக்களுக்கு அளித்த இயக்குனர் சர்குணத்தின் அடுத்த படைப்புதான் இந்த பட்டத்து அரசன். ட்ரெய்லரைப் பார்த்த மக்கள், “கபடி குறித்த படம்” என படத்தில் போய் உட்கார, “இது ஒரு குடும்ப கதைடா பேராண்டி” என அனைவருக்கும் டாடா காட்டியுள்ளது திரைக்கதை. ஃப்ளேஷ்பேக் காட்சிகளில் ராஜ்கிரணை ‘இளமையாக காட்டுகிறேன்’ என்ற பெயரில் ஏதோ செய்து வைத்திருக்கின்றனர்.
தாத்தாவை தப்பாக பேசும் நபர்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியுடன் இன்ட்ரோவாகிறார் அதர்வா. அதிலும், அடி கொடுத்து விட்டு அவர் பேசும், “பொத்தாரி கபடி கத்துக்கல டா..கபடியே பொத்தாரிக்கிட்டதான் கபடி கத்துக்கிச்சு” என்று அவர் பேசும் பஞ்ச் வசனம்தான் ஹைலைட். தன் குடும்பத்தினர் எவ்வளவு அசிங்கப்படுத்தி அனுப்பினாலும் வெட்கமே இல்லாமல் போய் நிற்கும் ஹீரோவின் அன்பு, சில சமயங்களில் “என்னா மனுஷன் டா” என சொல்ல வைத்தாலும், பல சமயங்களில், “நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா” என உச் கொட்ட வைக்கிறது. அதைக் கொஞ்சம் கட் பண்ணி இருக்கலாம். காதலுக்காகவும், கபடிக்காவும் பெயருக்கு ஹீரோயினாக வருகிறார், ஆஷிகா ரங்கநாத். இவருக்கு இன்னும் கொஞ்சம் படத்தில் வேலை கொடுத்திருக்கலாம்.
சறுக்கிவிட்ட திரைக்கதை:
படத்தில், ஆயிரம் எமோஷன்ஸ், சென்டிமன்ட் காட்சிகள் வைத்துள்ளதால், முதல் பாதியிலேயே ரசிகர்கள் மிகவும் களைத்து போய் விடுகின்றனர். கொஞ்சம் காமெடி, அதிகம் சண்டை, ஆங்காங்கே கபடி, பார்த்தவுடன் காதல் என நகரும் முதல் பாதியின் திரைக்கதை, அடுத்த பாதியில் அப்படியே ரிவர்ஸாகிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒரு சில காட்சிகளில் மட்டும் பின்னணி இசையில் பேசியுள்ளார். பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. ராஜ்கிரணும் அதர்வாவும் ஊர் மக்களிடம் சவால் விட்டுவிட்டு வெற்றிநடை போடும் இன்டர்வல் காட்சியல் மட்டும் “ராத்து ராத்து” கோரஸ் பாடல் மட்டும் கூஸ்பம்ஸ் வரவைக்கிறது.
“பட்டத்து அரசனில் அதர்வா ஹீரோ டா!” என நம்பி தியேட்டரில் போய் உட்கார்ந்த ரசிகர்கள், “அதர்வா ஹீரோவா? ராஜ்கிரண் ஹீரோவா?” என சற்று குழம்பிதான் போகின்றனர். சிங்கம் புலி கொஞ்சம் கொஞ்சம் காமெடி செய்கிறார், பாலா சரவணன் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
பழைய கபடி வீரராகவும், தன் பேரன்களுக்கு அதே கபடியை கற்றுத்தரும் கண்டிப்பான தாத்தாவாகவும் தனது அனுபவ நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். கடைசியில், கபடி ஆட முடியாமல் தனது சிஷ்ய பிள்ளையிடமே கையேந்தி நிற்கும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். சில க்ரிஞ் சென்டிமன்ட் காட்சிகளை கத்தரித்துவிட்டு, இன்னும் கொஞ்சம் சண்டைக் காட்சிகளையும் இணைத்திருந்தால், பட்டத்து அரசன் உண்மையாகவே பட்டையை கிளப்பியிருக்கும்.