Vivesini Movie Review: மீண்டும் ஒரு திகில் படம்! எப்படி இருக்கிறாள் விவேசினி?
Vivesini Movie Review : பவன் ராஜகோபாலன் இயக்கத்தில் நாசர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள விவேசினி படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Bhavan Rajagopalan
Nassar, Suresh Chakravarthi, Gary Cordice, Kavya
எங்கு பார்த்தாலும் பேய்படங்களே வந்துகொண்டிருக்கும் நேரத்தில் மற்றுமொரு பேய் படம் என்று எண்ணி அலுப்பாக படத்தை பார்க்க போகும் நமக்கு பல விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. விவேசினி தன்னை ஒரு பகுத்தறிவு படம் என்று சொல்லிக்கொள்வதால் எப்படி திகில் நிறைந்த பேய் படத்தின் வேகத்தில் கதையை நகர்த்திச் செல்ல போகிறது என்கிற ஆவலுடன் படத்தை பார்க்க ஆரம்பிக்கிறோம்.
கேமரா-வின் ஜெர்க்குகள், சிறப்பு சப்தம் அல்லது திடீர் தீடீரென்று அலறும் கேரக்டர்-கள் அல்லது எடிட்டிங்-ன் ஜம்ப் கட்டுகள் மூலம் மட்டுமே திகிலை வரவைத்திருப்பார்களோ? என்று பயந்தோம். இன்னொரு பக்கம் பகுத்தறிவு பிரச்சாரத்தை தூக்கலாக ஆக்கிவிடுவார்களோ என்ற high alert-ம் இருந்தது. விவேசினி இவை எல்லாவற்றிற்கும் நடுவில் ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பு கொடுத்து ஒரு முழுமையான திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
விவேசினி படத்தின் கதை
நறவங்காந்தம் என்னும் காட்டுப்பகுதில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும் அங்கு பெண்கள் போகக்கூடாதென்றும் சுற்றியுள்ள ஊர் பகுதிகளில் ஒரு நம்பிக்கை இருந்துவருகிறது. பகுத்தறிவு பிரச்சாரம் செய்பவரான ஜெயராமன் (நாசர்) நறவங்காந்தம் காட்டு பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதுபோல சென்று அங்கு பேய்களோ வேறு எந்த அமானுஷ்ய சக்திகளோ இல்லை என்பதை அம்பலப்படுத்த திட்டமிடுகிறார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் செல்லாமல் அவரது மகள் சக்தியையும் (காவ்யா) இன்னும் நான்கு நண்பர்களையும் அங்கு ட்ரெக்கிங் செல்வதற்கான சூழலை உருவாக்கி தருகிறார்.
சென்றவர்கள் காட்டுக்குள் கண்ட காட்சிகளும் பட்ட அனுபவங்களும் அவர் திட்டமிட்டதற்கு நேர் எதிராக இருக்கின்றன. அந்த ட்ரெக்கிங் பயணத்தின் அடிப்படையில் சக்திக்கும் ஜெயராமனுக்குமே முரண்பாடு உருவாகி உச்சபட்ச மோதலில் ஜெயராமன் உடல்நிலை மேலும் மோசமாகி மருத்துவமனையில் இறக்கிறார். பகுத்தறிவு நோக்கோடு அப்பாவால் வளர்க்கப்பட்டிருந்தாலும், காட்டுக்குள் பட்ட அவஸ்தைகளுக்கும் அனுபவங்களுக்கும் இடையில் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தத்தளிக்கிறாள் சக்தி. ஜெயராமன் திட்டமிட்டருந்தபடி காட்டில் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை என்பதை நிரூபித்தாளா? அதோடு அவள் காட்டில் அனுபவித்த உணர்வுகளுக்கு உண்மை காரணம் என்ன என்பதை கண்டறிந்தாளா? என்பது தான் படத்தின் முடிவு.
படத்தின் பிளஸ், மைனஸ்
சற்றே வித்தியாசமான கதை என்பதால் அது உருவாக்கி தந்திருக்கும் புதிய சூழல்களும் சாத்தியங்களும் அறிமுக இயக்குனர் பவன் அவர்களுக்கு, அவரது சிறப்பான திறமையை வெளிப்படுத்த களம் அமைத்து தந்திருக்கிறது. இது அவருக்கு முதல் படம் என்பது நம்ப முடியாதபடி உள்ளது. ஒரு 'ஜானர்'ஆக பேய் படத்தின் திகில் மர்மம் வேகம் எல்லாம் இருந்த போதும், ஒரு கலை படத்தின் நிதானமும், முதிர்ச்சியும், அழகியல் கூறுகளும் இயல்பாக வெளிப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக ட்ரெக்கிங் சென்றவர்களுக்குள் ஏற்படும் உணர்ச்சி மோதல்களும், ஊர் திரும்பிய பிறகு அப்பாவுக்கும் மகளுக்கும் ஏற்படும் உணர்வு மோதல்களும், சமீபகால சினிமாக்களில் காணக்கிடைக்காத dramatic compositions என்று உறுதியாக சொல்லலாம். நான்-லீனியர் முறையில் narrative அமைக்கப்பட்டிருந்தாலும், திரைக்கதையும் எடிட்டிங்-ம் சேர்ந்து இயக்குனரின் வலது கை இடது கையாக வித்தகம் காட்டியிருக்கின்றன.
ஓம் நாராயணின் கேமரா, திரைக்கதையின் மைய நோக்கத்தை கேமரா மொழியில் சிக்கெனப் பற்றுகிறது. ஒரே நேரத்தில் காட்டினுள் இருக்கும் குழப்பத்தின் இருட்டையும், வீட்டுக்கு வந்தவுடன் ஏற்படும் தெளிவின் வெளிச்சத்தையும் மிக துல்லியமாக காட்சிப்படுத்திக்கிறது. முழு பிரச்சாரமாக இல்லை என்ற போதும் டாக்குமெண்டரி-யாக காண்பிக்கும் பகுதிகள் சற்றே சோர்வை ஏற்படுத்துகின்றன. ஆஷ்ரமம் CFO-ஆக வரும் சேஷாத்திரி (சுரேஷ் சக்கரவர்த்தி) கதாபாத்திரம் முடிவை நோக்கி வேகமாக நகர்த்துவதற்காக தன்னுடைய அனுபவத்தை சக்தியிடம் பகிர்ந்துகொள்வது செயற்கையாக இருக்கிறது.
ஓடிடியை அலற வைக்கப்போக்கும் படம்
வன்முறை சார்ந்த படங்கள், formula படங்கள், இவை தான் தியேட்டர்-களின் அதிக screenகளை ஆக்கிரமித்திருக்கின்றன. விவேசினி போன்ற offbeat படங்களுக்கு தமிழில் நெறைய ரசிகர்கள் உண்டு என்ற போதும் அவர்கள் வரும் வரை இந்த படம் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகமே. OTT தளத்தில் வரும் போது பரவலான கவனிப்பையும், விமர்சனத்தையும் பாராட்டுதலையும் பெறும் என்பதை உறுதியாக சொல்லலாம்.