Partner Movie Review: நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்தாரா ஆதி? - எப்படி இருக்கு பாட்னர் திரைப்படம்: முழு விமர்சனம்!
Partner Movie Review in Tamil: மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம், 'பாட்னர்'. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம்.
Manoj Damodharan
Aadhi, Hansika, Palak Lalwani, Yogi Babu
Partner Movie Review in Tamil: மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி,பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் விஜய்,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் 'பாட்னர்'. ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம்.
படத்தின் கதை
ஆதியும், யோகிபாபுவும் திருடச் சென்ற இடத்தில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. இதில் யோகிபாபு ஹன்சிகாவாக மாற அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரியாகும்.
உயிரிழந்தவரின் டி.என்.ஏ.,வை நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் உடலில் செலுத்தி, இறந்தவரின் செயல்பாடுகளை கொண்டு வரும் மருந்து கண்டுபிடித்து வெற்றி பெறுகிறார் பாண்டியராஜன். அவரின் கண்டுபிடிப்பை வெளிநாட்டில் இருந்து திருட வருகிறார் பாண்டியராஜனின் முன்னாள் மாணவர் ஜான் விஜய். இதனிடையே தான் வாங்கிய கடனுக்காக, தங்கையை வட்டிக்காரனுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலை ஹீரோ ஆதிக்கு வருகிறது.
இதனால் பணம் சம்பாதிக்க யோகிபாபுவுடன் சேர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். இப்படியான நிலையில், ஜான் விஜய் அசைன்மெண்ட் இவர்களிடம் வருகிறது. இதற்காக வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை அரசியல்வாதி ரவிமரியாவிடம், தான் வந்து கேட்டால் மட்டுமே தர வேண்டும் என யோகிபாபு கொடுத்து வைக்கிறார். ஆராய்ச்சி மருத்தை எடுக்க பாண்டியராஜன் லேப்-க்கு வரும் இடத்தில் தவறுதலாக மருந்து யோகிபாபுவுக்கு செலுத்தபட அவர் பெண்ணாக (ஹன்சிகா) மாறுகிறார். இதன் பின்னர் நடக்கும் கலவரங்கள் தான் இந்த படத்தின் கதையாகும்.
நடிப்பு எப்படி?
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆதி தமிழில் படம் நடித்துள்ளார். ஆனால் இது அவருக்கான கம்பேக் படமாக அமையவில்லை என்பதே உண்மை. இதேபோல் இடைவேளைக்குப் பின் வரும் ஹன்சிகா, ஹீரோயினாக வரும் பாலக் லால்வாணி, யோகிபாபு, ரோபோ ஷங்கர், ரவிமரியா, முனீஷ்காந்த், தங்கத்துரை என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் யாருடைய கேரக்டரும் படம் பார்ப்பவர்களை பெரிய அளவில் கவரவில்லை. பொதுவாக மிரட்டலான வில்லன்களுக்கு படத்தில் அதிகம் காட்சி வைக்கப்பட்டிருக்கும் என பார்த்தால் இதில் ஜான் விஜய் வரும் சீன்களை எண்ணி விடலாம். 1
படம் எப்படி?
தங்கச்சி சென்டிமென்ட், திருட்டு, அறிவியல் ஆராய்ச்சி என ஆரம்பத்தில் சொல்லப்படும் கதை படம் சூப்பராக இருக்கும்போல என உட்காரும் ரசிகர்களுக்கு, இது காமெடி சீனா?... இல்லை சீரியஸ் சீனா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு திரைக்கதை மோசமாக அமைந்துள்ளது. படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். திருடப்போகும்போது கூட ஒரு சீரியஸ் இல்லை. தமிழ் சினிமா பார்த்து பார்த்து ரசித்த காட்சிகளை ஆங்காங்கே கோர்த்துள்ளார்கள்.
யாரிடமும் ஒரு முழுமையான நடிப்பு வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது. பாடல்கள் படத்துக்கு தடையாக அமைந்துள்ளது. ஆங்காங்கே ரோபோ ஷங்கர் ஒன்லைன் வசனங்களும், யோகிபாபு ஹன்சிகாவாக மாறி பெண்கள் குறித்து பேசுவதும் ரசிக்க வைக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தாலும் கூட காட்சிகளின் சுவாரஸ்யமின்மை அனைத்தையும் தலைகீழாக மாற்றி விடுகிறது.
மற்றபடி ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் படக்குழு செய்த மெனக்கெடலை கதையில் செய்திருந்தால் படம் நிஜமாகவே ரசிக்க வைத்திருக்கும் என்பதே உண்மை.