Insidious 5 Review: ‘பேய் இருக்குன்னு எழுதி போடுங்க’.. பயம் காட்டியதா ‘இன்ஸிடியஸ் தி ரெட் டோர்’ ? .. முழு விமர்சனம் இதோ..!
Insidious 5 Review in Tamil: இன்ஸிடியஸ் படவரிசையின் ஐந்தாம் பாகமான இன்ஸிடியஸ் தி ரெட் டோர் இன்று வெளியாகி இருக்கிறது. ஹாரர் பட ரசிகர்கள் நம்பி பார்க்கலாமா வேண்டாமா என்பதை காணலாம்.
patrick wilson
patrick wilson, Ty Simpkins, Lin shaye, Joseph Bishara, Rose Byrne
Insidious 5 Review: பாட்ரிக் வில்சன் இயக்கி நடித்திருக்கும் இன்ஸிடியஸ் தி ரெட் டோர் படத்தின் ஐந்தாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. டை சிம்ப்கின்ஸ், லின் ஷாய், ஜோசஃப், ரோஸ் பைர்னி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஸ்காட் டீம்ஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஜேம்ஸ் வான், லிக் வானெல் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.
படத்தின் கதையைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஆஸ்டிரல் புரோஜக்ஷன் (astral projection) என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாம். நிஜ உலகத்தில் இருந்து நமது ஆன்மா வெளியேறி கொடூரமான ஆவிகளின் உலகத்தின் வழியாக பயணிக்கும் ஒரு திறன் ஆகும். கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆவிகள் இதற்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த உலகத்திற்குள் நுழையும் ஒருவர் கவனமாக இல்லாவிட்டால் அவற்றை நிஜ உலகத்திற்குள் கொண்டுவரும் வாய்ப்புள்ளது. அல்லது இந்த ஆவிகளிடம் சிறைபட்டு அவை நம்மைக் கட்டுப்படுத்தலாம்.
இன்ஸிடியஸ் - தி ரெட் டோர்
இன்ஸிடியஸ் பட வரிசையின் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக துவங்குகிறது படம். ஜாஷ் மற்றும் அவரது மகனான டால்டன் ஆகிய இருவருக்கும் இடையிலான தந்தை மகன் மோதலில் இருந்து தொடங்குகிறது கதை. தனது சிறிய வயதில் இருந்தே தனது தந்தை தன்னுடன் இல்லாமல் போனதற்கு அவர்மேல் கோபமாக இருக்கும் டால்டன் ஒரு ஓவியப் பள்ளியில் சேர்கிறான். அதேசமயம் டால்டன் தனது சிறிய வயதில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான எந்த நினைவும் இல்லாமல் அவற்றை நினைவுக்குக் கொண்டுவர தவிக்கிறான்.
சிறிய வயதில் ஓராண்டுகாலம் அவன் கோமாவில் இருந்ததாக அவனிடம் கூறப்படுகிறது. அதே மாதிரி அவனது தந்தையும் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சில நினைவுகளை இழந்திருக்கிறார். டால்டன் தனது ஆழ்மனதில் தன்னால் முடிந்தவரை நினைவுப்படுத்தி ஒரு ஓவியத்தை வரைகிறான். அது ஒரு சிவப்பு நிற கதவு. இந்த சிவப்பு நிறக் கதவு வழியாக தன்னால் ஆவிகளின் உலகத்திற்குள் பயணிக்க முடியும் என்று தெரிந்துகொண்ட டால்டன் தன்னைப் பற்றியும் தனது தந்தைப் பற்றியுமான உண்மைகளை கண்டுபிடிக்க முயல்கிறான்.
இத்தனை சிக்கலான ஒரு கதைக்களத்தை புரிந்துகொள்ளவும், அதே நேரத்தில் ஒரு ஹாரர் படத்திற்கான அனுபவத்தை ஒரே சமயத்தில் அடையவும் முடியாமல் பார்வையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது திரைக்கதை. சரி படத்தில் பேயைப் பார்த்தாவது பயப்படலாம் என்றால் அதுவும் அவ்வப்போது ஏதோ டைம் பாஸிற்கு வந்துபோகிறது. மிக நிதானமாக நகரும் திரைக்கதை நத்தைக்கு வழிவிட்டுக் காத்திருக்கும் லாரி டிரைவரைப் போல் நம்மை பொறுமை இழக்கச் செய்கிறது.
கடைசி 20 நிமிடங்களே உண்மையான ஒரு த்ரில்லர் படமாக வேகமெடுக்கிறது இன்ஸிடியஸ். ஆனால் பார்வையாளர்களுக்கு எந்த வித சுவாரஸ்யத்தையும் தராமல் தன் திருப்திக்காக முடித்துவைக்கப்படுகிறது.இன்ஸிடியஸ் படம் ஏதோ தர்மத்திற்கு பேயை கண்ணில் காட்டிவிட்டு முடிகிறது. ஆக மொத்தத்தில் சந்திரமுகி படத்தில் பேய் இருப்பதாக நினைத்து போயிரலாம் மாப்ளை.. உள்ளே இல்ல வெளியே... என சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.