Good Luck Sakhi : குட்லக் சகி... கீர்த்தி சுரேஷிற்கு குட்லக்கா? பேட் லக்கா? பிரியாணி விருந்தில் கிடைத்தது என்ன?
இறுதிச் சுற்றில் கொஞ்சம், பிகிலில் கொஞ்சம், கனாவில் கொஞ்சம், இன்னும் எத்தனை விளையாட்டு படங்கள் இருக்கிறதோ... அத்தனை படங்களையும் நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்.
Nagesh Kukunoor
Keerthy Suresh, Aadhi , Jagapathi Babu , Swetha Varma
குட்லக் சகி... தெலுங்கிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வந்துள்ள படம். அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி, வெளிச்சம் படாமல் மறைந்து போன படம். அதற்கு காரணமும் உண்டு.
பழங்குடி பெண் சகி. எதை தொட்டாலும் அது எடுபடாது. அவரை பார்த்தாலே எதுவும் நடக்காது என்பது மாதிரியா தோஷிப் பெண்ணாக அறிமுகம் ஆகிறார் கீர்த்தி சுரேஷ். ‛பேட் லக்’ சகி என ஓப்பனிங் சாங் வேறு அவருக்கு, அவர் எதை செய்தாலும், அது ஏடாகுடமாகவே மாறும். ஆனால், அவரை அந்த கிராமத்தில் யாரும் எதிர்க்கவில்லை, வெறுக்கவில்லை. அந்த மாதிரி காட்சிகள் எதுவும் அங்கு இல்லை.
திடீரென பட்டாளத்திலிருந்து வரும் ஜெகபதி பாபு, துப்பாக்கி சுடும் பயிற்சியில் கிராமத்தில் யாரையாவது சாம்பியன் ஆக்க வேண்டும் என உழைக்கிறார். அதில் ‛பேட் லக்’ சஹி தேர்வாகிறார். அவரை சாம்பியன் ஆக்குகிறார் ஜெகபதி. இது தான் கதை. ஒரு கடையில் பிரியாணி சாப்பிட அமர்ந்தால், புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம், தயிர் சாதம் இதையெல்லாம் சேர்த்து, இது தான் பிரியாணி என்று கொடுத்தால் எப்படி இருக்கும்? இந்த படம் மாதிரி தான் இருக்கும்.
இறுதிச் சுற்றில் கொஞ்சம், பிகிலில் கொஞ்சம், கனாவில் கொஞ்சம், இன்னும் எத்தனை விளையாட்டு படங்கள் இருக்கிறதோ... அத்தனை படங்களையும் நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் கலவை தான் ‛குட் லக்’ சகி. அடுத்த அரை மணி நேரத்திற்கு பின் வருவதை, முன்கூட்டியே கணிக்க முடிகிறது என்றால், அந்த கதையின் தரத்தை நாமே கணித்துக் கொள்ள வேண்டியது தான்.
ஆதியை வில்லன் ஹீரோவாக்கி, ஜெகபதியை ஹீரோ குணச்சித்திரமாக்கி, கீர்த்தி சுரேஷை காமெடி காதலியாக்கி, மொத்தத்தில் கதையை ஒரு வழியாக்கியிருக்கிறார் இயக்குனர் நாகேஷ் குகுநூர். இதை தெலுங்கோடு நிறுத்திருக்கலாம். கீர்த்தி சுரேஷ் மீது அவருக்கு என்ன கோபம் என தெரியவில்லை, தமிழிலும் மொழி பெயர்த்து, இங்கேயும் அவரை ஒருவழியாக்கியிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையை விட பின்னணி அருமையாக இருக்கிறது. என்ன பின்னணி இருந்தாலும் கதையின் முன்னணி இல்லாததால், குட் லக் சகி, பேட் லக்காக அமைந்து விட்டது. ஏதோ புதுமை செய்கிறேன் என்கிற பெயரில், தூசு தட்டிய கதையை டிம்பர் பெயிண்ட் அடித்து நிறுத்தியுள்ளனர். ஆனால் மழையில் நனைந்து உரிந்த பெயிண்டாக மாறிவிட்டது அவர்களது நிலை.
பொறுமையாக பார்க்க வேண்டும். பார்த்தாலும், பொறுமைக்கும் பொறுமை வேண்டும். ஆனால், உண்மையில் ஆறுதலான ஒரே விசயம்.... கீர்த்தி சுரேஷ் அழகு. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இந்த படத்தில் தான், மீண்டும் பார்க்கத் தோன்றும் தோற்றத்தில் இருக்கிறார் கீர்த்தி. அந்த வகையில் மேக்கெப் மேனோ, வெமனோ... அவருக்கு பாராட்டு! மற்றபடி குட்லக்... எல்லாம் சொல்ல முடியாது!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்