Chandramukhi 2 Review: வேட்டையன் கேரக்டரில் ட்விஸ்ட் வைத்த பி.வாசு.. சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
Chandramukhi 2 Review in Tamil: கமர்ஷியல் படங்களை விரும்பும் நபர்களாக நீங்கள் இருந்தால், குடும்பத்துடன் சந்திரமுகி 2 படத்திற்கு செல்லலாம்.
P. Vasu
Raghava Lawrence, Kangana Ranaut, Vadivelu, Raadhika Sarathkumar, Mahima Nambiar, Lakshmi Menon
Chandramukhi 2 Review in Tamil: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகம் (Chandramukhi 2) இன்று வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கு காணலாம்.
கதைக்கரு
பணக்கார குடும்பம் ஒன்று,தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அக்குடும்பத்தின் பிரச்சினைக்கு குல தெய்வ வழிபாடு ஒன்றே தீர்வு என கூறுகிறார் குருஜி ஒருவர். இதனால் அந்த குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் இரத்த சம்பந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் வருகிறார். அந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு தீர்வு கிடைக்கிறதா என்பதே சந்திரமுகி 2 படத்தின் க்ளைமாக்ஸ்.
முதல் பாகத்தின் தொடர்ச்சி, இப்படத்தில் காட்டப்படுகிறது. அதில் இருக்கும் முருகேஷன், (வடிவேலு) இந்த பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை மாந்தர்களான வேட்டையன் மற்றும் சந்திரமுகியை சுற்றியே படக்கதை நகர்கிறது.
கதை திரைக்கதை எப்படி ?
பேய் படங்களை பொறுத்துவரை, தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைக்கு உள்ளாகி, இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள். ஆனால், சந்திரமுகி படக்கதை, இதில் இருந்து வேறுபடுகிறது எந்தவொரு தொடர்பும் இல்லாத மூன்றாவது நபர்கள், பலியாடாக மாறுவது மற்ற படத்தில் இருந்து சந்திரமுகி 2 படத்தை தனித்து காட்டுகிறது. முதல் பாகத்தில் க்ளாசிக் டச் கொடுத்த பி.வாசு, இதில் பிரம்மாண்டத்தோடு சேர்த்து கமர்ஷியல் கதைக்கான வித்தைகளையும் மொத்தமாக இறக்கியுள்ளார்.
நடிப்பு சுமாரா? சூப்பரா?
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லக்ஷ்மி மேனன், ஷ்ருஷ்டி டாங்கே, ஒய்.ஜி.மகேந்திரன், மானஸ்வி கொட்டாச்சி, ஆர்.எஸ்.சிவாஜி, மனோ பாலா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. என்னதான் இருந்தாலும் முதல் பாகத்தில் இருக்கும் நடிகர்கள் ஒவ்வொரு ப்ரேமிலும் மிஸ் செய்கிற எண்ணம் வந்துகொண்டுதான் இருந்தது.
பாண்டியன் மற்றும் வேட்டையனாக நடித்த ராகவா, ரஜினியை இன்பிரேஷனாக எடுத்து நடித்துள்ளார். அதுபோல், பால்கார பெண்ணான மஹிமாவின் நடிப்பில் தோட்டக்கார பெண்ணாக நடித்த நயன்தாராவை காணமுடிகிறது.
ராதிகா சரத்குமார் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டதனால், முதல் பாகத்தில் இருக்கும் அலப்பறையான காமெடி காட்சிகள் இதில் மிஸ்ஸிங். மேலும் லக்ஷ்மி மேனனுக்கு முதல் பாதியில் ஸ்கோப் இல்லையென்றாலும், இரண்டாம் பாதியில் தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.
ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனா ரணாவத்தை சந்திரமுகி கேரக்டரில் அவ்வளவு எளிதாக பொருத்தி பார்க்க முடியவில்லை. நளினத்தை வெளிப்படுத்தும் இடங்களில் எல்லாம் தலைவி படத்தில் வரும் கங்கனாதான் நினைவிற்கு வருகிறார். இதனைத் தவிர மற்ற கேரக்டர்கள் எல்லாம் அந்தந்த காட்சிகளில் வந்து செல்கின்றனர். எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு பாடலாவது கேட்கிற மாதிரி இருக்கா?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் புகழ் கீரவாணியின் இசையில் பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும், முதல் சந்திரமுகியை நினைவூட்டும் வகையில் தான் ஒவ்வொரு பாடலும் உள்ளது. குறிப்பாக படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ரா ரா”பாடலை இரண்டு வெர்ஷனில் உருவாக்கி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார். ஏராளமான பாடல்கள் நிறைந்துள்ள நிலையில் பின்னணி இசை சில இடங்களில் மிரட்டலாக இருக்கிறது.
தியேட்டரில் பார்க்க வேண்டிய படமா?
முதல் பாகத்தில் வேட்டையனாகவும் சந்திரமுகியாவும் தன்னை தாங்களே நினைத்து கொள்பவர்களாக ரஜினி, ஜோதிகா நடித்திருப்பார்கள். மனநல பிரச்சினை என சொல்லி இந்த நிகழ்விற்கு முதல் பாகத்தில் தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், 2ஆம் பாகத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஷ்பேக் காட்சியில் காட்டப்படும் ட்விஸ்ட் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.
18 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த இரண்டாம் பாகம், முழுக்க முழுக்க கமர்ஷியல் பேய் படமாகவே காண்பிக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன் என்னதான் நடந்தது என்பதை விவரமாக விளக்கி, பேய் படங்களில் வரும் வழக்கமான க்ளைமாக்ஸுடன் நிறைவு பெறுகிறது. படத்தில் சில குறைகள் இருந்தாலும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தியேட்டருக்கு செல்பவர்களாக இருந்தால் சந்திரமுகி 2 படத்தை நீங்கள் தாராளமாக பார்க்கலாம்.