Bachelor Review: காதல் , காமம், கர்ப்பம்... பேச்சுலர்... ஒன்லி பேச்சுலருக்கான படமா?
Bachelor Movie Review Tamil : முதல் பாதியில் பேச்சுலர் வாழ்கை, காதல், காமம் என செல்லும் திரைக்கதை இராண்டாம் பாதியில் தேமே என்று செல்கிறது.
Sathish Selvakumar
GV Prakash Kumar, Divya bharathi
ஜிவி பிரகாஷ்குமார், திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் பேச்சுலர் (Bachelor). படத்தை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கிறார். முன்னதாக, படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஜிவி பிரகாஷ்குமாருக்கு அறிமுகமாகும் திவ்யபாரதியை அவர் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ்குமார் மீதும் காதல் கொள்ளும் திவ்யபாரதி கர்ப்பமாகிறார். இந்த கர்ப்பம் வீட்டுக்குத் தெரிந்தால், பிரச்னை ஆகிவிடும் என்று ஜிவி கர்ப்பத்தை கலைக்கச் சொல்ல, அதனை திவ்யபாரதி மறுக்கிறார். இதனால் திவ்யபாரதிக்கும், ஜிவிக்கும் இடையே மோதல் உருவாகிறது.. இந்த மோதலில் திவ்யபாரதியின் கர்ப்பம் கலைந்ததா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பது மீதிக்கதை..
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் ஹீரோயின் திவ்யபாரதி. திரையில் அவரது ஸ்கீரின் பிரசன்ஸ் அப்படியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நண்பர்களுடன் ஜிவி அடிக்கும் லூட்டிகள், பேச்சுலர் வாழ்கைக்கே உரித்தான சேட்டைகளெல்லாம் அவ்வளவு ஃப்ரஷ்ஷாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமாருக்கும், திவ்யபாரதிக்கும் இடையேயான காதல் இன்றைய தலைமுறை காதலின் ஜெராக்ஸ். முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம் திவ்யபாரதிக்கு. காதல் காட்சிகளாகட்டும், எமோஷனல் காட்சிகளாட்டும் இரண்டிலும் தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முந்தைய படங்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் ஜிவிக்கு. காதல் காட்சிகளில் அசால்டாக ஸ்கோர் செய்யும் ஜிவிக்கு, ஆக்ரோஷமான காட்சிகளில் அந்த ஸ்கோர் மிஸ் ஆகிறது. இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கதாபாத்திரத் தேர்வு பிரமாதமாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஜிவியின் அம்மாவாக வரும் நக்கலைட்ஸ் தனம், நண்பர்களாக வரும் அருண், பகவதி பெருமாள், திவ்யபாரதியின் மாமாவாக வரும் விஜய் முருகன் என ஒவ்வொருவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
முதல் பாதியில் பேச்சுலர் வாழ்கை, காதல், காமம் என செல்லும் திரைக்கதை இராண்டாம் பாதியில் தேமே என்று செல்கிறது. ஜிவி திவ்ய பாரதியின் மோதலில் பிரச்னை கோர்ட்டில் வந்து நிற்க, பிரச்னை சரிசெய்ய ஜிவி தரப்பும் எடுக்கும் முடிவும், அதை சுற்றிய காட்சிகளும், இடையில் மிஷ்கின் வருவதும், சப்பா எப்படா படத்தை முடிப்பீங்க என்று கேட்க வைத்து விடுகிறது.
முனீஸ்காந்தின் மற்றும் நண்பர்களின் காமெடிதான் இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ். படத்திற்கு மிகப் பெரிய பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு.. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.. பின்னணி இசையில் கேரள சாயல் இருந்தாலும் கவனம் ஈர்க்கிறார் சிந்து குமார். இறுதியில் தவறை உணர்ந்து கர்ப்பிணியான திவ்யபாரதியிடம் வந்து நிற்கும் ஜிவியை ஏற்கும் முடிவில் வித்தியாசம் காட்டியிருப்பது தமிழ் சினிமாவிற்கு புதிது.